Thursday 19 May 2016

குருதியில் தோய்ந்த சூரியன்

கிளைகள் பிளந்த நெடுமரங்களில்
வீழ்ந்துபடுகின்றான்
எழாண்டுகள் முன் குருதியில்
தோய்ந்த சூரியன்

நிலம்
துயரை சுமந்திருக்கிறது.

காலம்
உதிர்தல் குறித்த அச்சத்துடன்
அவசரமாகக்  கடக்கிறது.



இன்னும்,
கனவுகளைச் சுமந்து
கையறுந்த சொற்களுடன்
உயிர் தரித்திருக்கிறார்கள் எஞ்சியோர்.

உயிர்.

************************************

பெரு வீதிகள்
உயிர்த்தன.
கட்டிடங்கள் உயர்ந்து
உருக்கொண்டன.
நீலக் கடலும், கரையும்
நீண்ட தரவை வெளிகளும் உருமாறின
அன்றில்
உருவிழந்தன.

உப்பங்களிகளில்
கண்டல் நிலங்களில் இன்னும்
எஞ்சிய திசைகளிலெல்லாம் வாழ்ந்த
பெயர் தெரியாப் பறவைகளையும் காணவில்லை.

நிலம்
துயரை சுமந்திருக்கிறது.

காலம்
இன்னும் அச்சத்துடன்,

யாரறிவார்.
நாளை,
உயிர் தரித்திருத்தலே
குற்றமாகவும் கூடும்.

உயிர்.

*************************************

யுக மீட்சியின்
பேரிகைகள் நிசப்தமாகிய பொழுதொன்றில்
நந்திக் கடல்க்குருதியில்
விழுந்தான் சூரியன்.

முது பாரம்பரையொன்றின்
வீரக்குரலில்
நீண்டெழுந்தது இறுதிப் பாடல்.

நிலம்
துயருடன் பாடலையும்
சுமந்திருக்கிறது.
ஒரு கருவுற்ற தாயைப் போல

No comments:

Post a Comment