Monday 29 December 2014

வானம் நிறையும் தனிமை.

பெரும் குரலெடுத்துப் பாடிக்கொண்டிருக்கிறது
இலையுதிர்காலத்தின் கடைசிப் பாடலை
நீண்டவால்க் குருவி.

வானத்தின் சோகங்களையும்
வீதியின் தனிமைகளையும்
பழுத்த ஊசிஇலைகளின் துயரங்களையும்
துணைக்கழைத்து நேசிப்பின் வரிகளை
இழைத்துக்  கூவியழுகின்றது.



சேர்ந்து இசைக்கும்
குரலொன்று வருமென்ற தேடலில்
நியமம் தப்பாத இடைவெளிகளை
சலிப்பின்றி விட்டு காத்திருக்கவும் செய்கின்றது.

நீண்டவால்க் குருவியின் ஒற்றைக்குரலில்
சூரியன் மரணிக்கத்தொடங்குகிறான்.

இருளின் பெருக்கத்தொடு இயைந்து
மௌனத்தின் இடைவெளியும் நீண்டு
கனக்கத் தொடங்குகையில்,

அந்த
இடைவெளிகளின் நிசப்தத்தில்
மூச்சின் ஒலிகளை  நிறுத்திக்
காவலிருக்கத் தொடங்குகிறேன்.

இன்னொருகுரல்
எங்காவது ஒலித்துவிடாதா....
நீள்கின்ற தனிமை இந்த
இலையுதிர்காலத்தொடு கலைந்துவிடாதா ....

நீண்டவால்க் குருவியின்
ஒற்றைக்குரலும் தளம்பத்தொடங்குகிறது.
குளிர் மெல்லப் பரவ.
அங்குமிங்கும் வெண்துகள்கள் சிந்தத்தொடங்குகிறது.

எங்கும் இருள்.
தூண்களில்,
மின்குமிழ்களில்
தடித்த கோடுகள் நீள்கின்றன.
யன்னல்கள்  அடைந்து கொள்கின்றன.

உதிர்ந்துகிடக்கும்
மஞ்சள்  இலையொன்றை எடுத்து
நரம்புகளோடு பேசத்தொடங்குகிறேன்.

உள்ளங்கையில் தவறிவிழுந்த
ஒற்றைத் துளியின் சூட்டில்
நீண்டவால்க் குருவியின் மௌனத்தால்
நட்சத்திரமொன்று  உதிர்ந்துகொண்டதை உணர்ந்தேன்.

காலடியில்,
வானம் வெறுமையாகிக் கிடந்தது.




No comments:

Post a Comment