Saturday 22 November 2014

உள்ளெரியும் தீ சுமந்தொரு தீபமேற்றுவோம்,

துயர் காவிகளாய்
இருண்டு கிடக்கின்றன வான்முகில்கள்

முகம் மழுங்கிச்
சிதைந்து எழுகிறது ஒளிமுதல்

விதை விழுந்த நிலத்தில்
கிளையெறிந்த பெருமரங்கள்
இயலாமையோடு மௌனித்துக் கிடக்கின்றன,


நீண்ட வீதிகள்
இனங்களை இணைத்துவிடவென்று
மக்கிப்போகாத  உடலங்கள் மீதேறிப் போகின்றன,

முள்வேலிகட்டிய பகை,
நெஞ்சுக்கூட்டில்  பட்டுக்கம்பளம் விரித்து
வரவேற்புரை நிகழ்த்துகிறது.

காற்றினில் கந்தகநெடி இல்லை
வானில் மிகையொலி விமானங்கள் இல்லை
கடலினில் செங்குருதி மிதக்கவில்லை
தீசூழ்ந்து எம்மூர்மனைகள் அழியவுமில்லை

இருந்துமொரு,
தீபம் ஏற்றிட வழியில்லை
மணியொலித்துக்  காந்தள் தொடுத்து,
கல்லறை தொழுதிடவொரு களமும் இல்லை.

மண்சுமந்த வேழங்கள் நடந்த தடத்தில்
கண்ணீர் சொரிந்து கலங்கி
அழுதிடத் தன்னுமொரு நாதியில்லை.

ஆற்றொனாப் பெருவலிசுமந்து
எதிர்கொள்ளும் கார்த்திகை இது .
உள்ளெரிந்து நீறாகி ஒற்றை மூச்சில்
நினைவடக்கி ஒடுங்கும் கார்த்திகையுமிது.

காலப்பெருநதியில்  கரைந்துவிடாமல்
கனவுகளும் நினைவுகளும் உணர்வுகளும்
இறுகிக்கிடக்கின்றன.

ஒருநாள்
உருண்டு திரண்டு
ஊழியாய் மாறிப்பெருகும்.
கரைகளை உடைத்து
உலராத உடலங்களை ஊடுருவிப்பாயும்.

மண்மேடுகளிலும்
சாம்பல் திட்டுக்களிலும்
பகைதின்ற எச்சங்களிலும் புத்துயிர்ப்பை நிகழ்த்தும்.

வலிசுமந்தோரே
வாருங்கள். இன்று,
உள்ளெரியும் தீ சுமந்தொரு
தீபமேற்றுவோம்,
நின்றெரியும் அத்தீயில் ஒரு சபதமேற்றுவோம்.

நன்றி
http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=9&contentid=9cde543f-b349-4798-bf80-eafc4b6d6aed

1 comment:

  1. வணக்கம்
    என்ன செய்வது காலம் பதில் சொல்லும் ..... அருமையாக உள்ளது கவிதை. பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete