Tuesday 21 October 2014

இரவைத் தின்னும் நிலவு

நட்சத்திரங்கள் உதிர்த்த கண்ணீர்த்துளிகள்
காற்றினை நடுக்கமுற வைத்த இரவொன்றில்
தனிமையின் பயத்தால்
உனைப் பற்றிப்  பேசத்தொடங்குகிறேன்.

பிரிய தோழி,

நீ யன்னல் சீலைகளில் இருந்து இறங்கி
அறியப்படாத வர்ணமொன்றாகி
அறையெங்கும் நிறைகிறாய்.


வெட்கமகற்றிக்  கூந்தல் கலைத்து
இயல்பாயென் போர்வைக்குள் நுழைகிறாய்.

பரவும் வெப்பம்
பெருமூச்சினை நினைவூட்ட
என் தனிமை
நிர்வாணத்துள் ஒளிந்து கொள்கிறது.

குறிப்புணரா பொழுதொன்றில்
நிறைகாமம் அழிந்துபோக
ஆழியின் பெருமௌனத்துடன்
அடங்கி விழித்துக்கிடக்கிறேன்.

அன்றொருநாள் உன்,
இதழ்களிலிருந்து இறங்கிய சாத்தான்
மூன்றாம் இரவிலும் உயிர்த்தெழ,
எதிர்கொள்ளத்  துணிகிறேன்
தற்கொலை ஒன்றுக்கு முன்னான அமைதியுடன்.

2 comments:

  1. சிறந்த பாவரிகள்
    தங்களுக்கும்
    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
    http://yppubs.blogspot.com/2014/10/blog-post_21.html

    ReplyDelete
  2. தற்கொலை ஒன்றுக்கு முன்னான அமைதியுடன்.// அருமையான கவிதை.

    ReplyDelete