Sunday 20 July 2014

ஒலித்துக்கொண்டிருக்கும் இசை....

எல்லா நேரங்களிலும் எல்லாவற்றையும் வாசிக்க முடியாது. அப்படி வாசிப்பது  என்பதும் உண்மையில் அது ஒரு ஆழமான வாசிப்பாகவும் இருக்கமுடியாது. அதுவும் கவிதைகள் என்றால், அதனை உள்ளுணர்ந்து வாசிக்கவும், அதன் அழகுணர்ச்சியில் மூழ்கிப்போகவும் அதனோடு ஒன்றிணைந்து பயணிக்கவும், தனியானதும் நேர்த்தியானதுமான ஒரு வேளை அல்லது சந்தர்ப்பம் அமையவேண்டும் என்பது என் அனுபவமாக இருக்கிறது. சிலருக்கு வேறுவிதமாகவும் இருக்ககூடும்.



தன்னோடு மட்டும் பேசப்படுகின்ற விடயங்களை, தன்னால் மட்டும் பேசப்படுகின்ற சந்தர்ப்ப விடயங்களை, எதோ ஒரு காலத்தின் வலிகளை, கனவுகளை, நிகழ்ந்துகொண்டிருக்கின்ற வசீகரங்களை,இழப்புக்களை,  நாளை மீதான எதிர்மறைகளை இப்படியாக ஒவ்வொன்றையும்  காவிச்செல்லாமல் அந்தந்தக்கணங்களில் இறக்கிவைத்த பின்  நிகழும் வெறுமையோடு சங்கமித்து சல்லாபித்து போய்விட ஒரு கவிஞனால் மட்டும் தான் முடியும். கவிஞன் போய்விடுவான். அவன் படைத்த கவிதை ஒவ்வொன்றாக அதிர்வித்துக்கொண்டே இருக்கும்.

காலங்களில் ஏறிப் பயணிக்கும் அந்த கவிதைகள் கால இயந்திரமாகி அந்த அந்த காலங்களுக்கு வாசகர்களையும் அழைத்துச்செல்லுகின்றன. மெல்ல அமிழ்ந்து கிடக்கும் உணர்வுகள் உருப்பெற்று மௌனமாக, மெல்லிய பதற்றமாக, திரளும் கண்ணீர்த்துளியாக, இயலாமையோடு கூடிய ஒரு பெருமூச்சாக எழுந்துவிடுகிறது. நல்ல கவிதைகள் இதைதான் செய்தும் விடுகிறது. அப்படியானதொரு  அசைவினை  "அந்த இசையை மட்டும் நிறுத்தி விடாதே" என்ற கவிஞர் வாசுதேவனின் கவிதைத் தொகுப்போடு பயணிக்கையில் உணர்ந்துகொண்டேன்.

"அந்த இசையினை மட்டும் நிறுத்திவிடாதே"  அந்த தலைப்பினை வைத்தே எத்துனை நுண்ணிய மன உணர்வுகளை கடக்கலாம். இசை, மனித மனங்களோடு பினைந்திருப்பதும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பிரிக்கமுடியாததும் என்பது வெளிப்படையானது. அது எத்தகைய இசையாக இருக்கட்டும் அவலமாக, கேளிக்கையாக, நக்கலாக, உற்சாகமூட்டுவதாக வேறு என்ன வடிவமாக தன்னும்  இருந்துவிட்டு போகட்டும் அந்த இசை அனுபவிப்பவனை மீறி நின்றுவிடுகையில்  சூழ்ந்து நிறைகின்ற வெறுமை வலியினை என்ன வார்த்தைகளில் வடிப்பது...

"எண்ணியதை முழுதாய் சொல்வதற்கான 
மொழி எப்போதும் என்னிடம் அகப்பட்டதில்லை 
எனும் உண்மையை முதலிலேயே சொல்லிவிடுகிறேன்"

என்று வாசர்களுக்கு கூறிக்கொள்ளும் கவிஞன்

"இவ்வளவு ஏகாந்தத்தை எங்கிருந்து 
பெற்றது சமுத்திரம் 
மழையொன்றின் பின் வெள்ளத்துள் நின்று 
நீரளைந்து விளையாடும் குழந்தையைப் போல 
சமுத்திரத்தை கொள்கிறது பிரக்ஞை" 

என்று குறியீடுகளூடாக தான் சொன்னவற்றை உடைத்தெறிந்து நிலைகொண்டுவிடுகிறார். இலக்கியத் தொன்மைவாய்ந்த மொழியின் அறிவு, பல்மொழி  இலக்கிய அறிஞர்களின் பரீட்சயம், நாளந்த மக்களின் அனுபவங்கள் என பல கிளைகளூடாக தனக்கான அனுபவத்தினை பெற்றுக் கொள்ளும் படைப்பாளி அவற்றை தன் நிலையில் நின்று சமூகத்தின் மீது சாடுகையில்,

'ஊரெரிந்து சாம்பரான பின்னர் 
மூக்கறையர்களை வெறுப்பவர்களால் 
ஊரேயெரிந்ததேயென 
அழுதுகொண்டிருந்தான் மூக்கறையன்" 

என்று எங்கள் சமூகத்தின் முகத்தைக் கிழித்துவிட்ட பின்,

"நீ இடதுசாரியில்லையா என்று 
சற்று ஏக்கத்துடன் கேட்டான் நம்புத்திஜீவி 
பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஆயுதம் வழங்கிப் 
போராடச் சொன்னது பாரிஸ்கம்யூன் என்றான் 
பலஸ்தீனன். 

வேண்டாம் வம்பு என்று 
விலகி நடந்தொண்டிருந்தான் நம் புத்திஜீவி"

என்றும் போட்டு உடைக்கிறார். உண்மையில், தரிசனங்களாக இவையே நிகழ்ந்தும் முடிந்திருக்கின்றன நிகழ்ந்தும் கொண்டிருக்கின்றன.

முள்ளிவாய்க்கால் பேரவலம் தந்துபோன வடுக்களை தடவிப் பார்க்க வரும் வலிகளை காலங்களுக்கும் ஊடுகடத்திச்செல்லும் கவிதை "பொல்லாப்பும் வேண்டாம்" 

பொல்லாப்பும் வேண்டாம் போடீ நீ தமிழ்க் கிழவி 
செல்லாதே போயிற்றுன் செருக்குத்திமிர். 
பயனின்றியென் கண்முன்னே நில்லாதே..

என்று தொடரும் கவிதையில்,

"சோறும் கறியும் அத்தோடு சிறிதே கள்ளும் கொடு 
யார்முதுகும் சொறிவானடியுன் இளையமகன் 
மாலைப்பொழுதுகளில் சிறுவரைப் போல 
மகிழ்ந்துவிளையாட கோவிலொன்றும் கொடு 
போதுமடி அவனுகது" என்றும்,

பறையடித்துச் சொல்வேன்
இனியெதுவும் வாரா
என்றும் கூறுகிறார்.

எவ்வளவு உண்மை. இன்று எல்லாம் இழந்தபின் தமிழின், தமிழினத்தின் நிலை என்ன? எமக்கு மௌனம் தான் பதிலாகிறது ஆனால் கவிஞர்

ஹோமர்கள் வேண்டுமானால் 
காவியம் பாடிக்கொண்டிருக்கட்டும்
அதிக புகழ் யாருக்கானதென 
அவர்கள் சச்சரவு செய்துகொள்ளட்டும். 
 என்று விடை கொடுத்து தொடர்ந்தும் பயணிக்க தூண்டுகிறார்.


இவருடைய கவிதைகளின் இயங்குதளத்தில்  சுயகூற்றுத் தளமானது அழகியல் சார்ந்தும்  மனஇறுக்கங்கள் சார்ந்தும் இயங்குவதை காணலாம். இவரின்  அடையாளமாக இந்த கவிதைகளையே கொள்ளமுடிகிறது என்னால்.

வாழ்வியலை எதிர்கொள்கையில் எழும் துன்பங்களும் துயரங்களும் இன்பங்களும் நெகிழ்வுகளும் அதனை அனுபவிப்பவனை மீறி வார்த்தைகளில்  வந்துவிடுகையிலும், எதிர்கால நினைவுகளையும் கனவுகளையும் ஏன் இறப்பையும் கூட பாடிவிடுகையில் அந்தப் படைப்பு ஒவ்வொருவரையும் அழைத்துச்செல்கிறது அந்த பாதைக்கு.  எதோ ஒரு நாளில் அவர்கள் கடந்துவந்த, கடக்கப்போகும் பாதையாக அது இருக்கிறது.

எங்கே உறங்குகிறாய் நீ அலெக்ஸாண்டர்
எங்கு சென்றீர்கள் சீசர்களே 
எங்கே நீ ஜென்சீஸ் கான் 
நித்திய மனிதர்களே.. 
வரல் ஆற்றுக்கு 
வடிகால் அமைக்கத் துனிந்தவர்களே 
எங்கே இன்று நீங்களெல்லாம்...
என்றும்..

இலையுதிரும் பிஞ்சுதிரும் காயுதிரும் 
இறுதியில் வேர்பாறி மரம் சாயும் எனவோர் 
இரவுப்பாடகன் இன்னோர் கனவில் 
பாடியது இக்கனவில் வீழ்ந்ததும்
நானெழுந்தேன் வியர்த்துடலம் நடுங்கியது

என்று வாழ்வின் முடிவினை நினைத்தும் எழுதியதை தொடர்ந்து..

ஒவ்வொரு மனிதனின் தனிமைகள் மீதான வேற்றுமைகளை பதிகிறார். இன்னொரு சக மனிதனின்  தனிமைக்காக வருந்தும் அதே மனதோடு தன் தனிமைகளை காப்பாறிக்கொள்ளவும் மன்றாடுகிறார்.

நான் மூடிப் போய்விட்ட 
என் கதவுகள் முன்னால் 
நீ சினமுற்றிருக்கவும் கூடும். 
நகர்வற்றுக் கிடந்த ஒரு நத்தையோட்டினுள் 
நான் குடிபெயர்ந்து கொண்ட செய்தி 
உனக்கெட்டியிருக்காதென்பதை நானறிவேன்.
என்று கூறி தனிமையைக் காப்பாறிக்கொள்கிறார்.

போதையும் கலவியும் என் வாழுங்காலத்தில் 
வாழ்வுடன் கொண்டிருந்த சமாதானத்தின் 
நியாயங்களாகவிருந்தன என்பதனை
நினைவு கூர்ந்து கொள்ளுங்கள்  

நான் காலமாகிவிட்டேன் 
காலமினி எனக்கில்லை .... 

வாழ்கைப் போராட்டத்தின்  சமாதனங்களாக கொண்டிருந்தவற்றை தன்னோடு அவை கொண்டிருந்த நெருக்கத்தை வாக்குமூலமாக பதிந்துவிட்டு இறுதியாக ஒரு செய்தியையும் சொல்லி வைக்கிறார்.

மற்றவர்கள் பிடித்தமான உங்கள் வழிகளில் 
போதை கொள்ளுங்கள் .. என்று,

தன் மரணத்துக்காக கலங்கச்சொல்லியோ கண்ணீர்விடச்சொல்லியோ கேளாமல் கொண்டாடச்சொல்லும் பாங்கு மீள ஒருமுறை நிமிர்ந்து பார்க்கச்சொல்லுகிறது.

காலத்தின்  வெறுமையை, மனித மனதின் சாயம் பூசப்படாத பக்கத்தை வரிகளாக்கி எழுந்து நிற்கும் கவிதைகள் மீள ஒருதடவை அந்த படைப்பாளியுடன் கவிதைகளின் ஊடாக பயணிக்க செய்கின்றன.அந்த தனி மனிதனின் இன்ப துன்ப நெகிழ்ந்த நிகழ்வுகளூடாக வாசகனை ஆற்றுப்படுத்த முனைகின்றன.

கவிதைகளின் நீட்சி  சில இடங்களில் அயர்ச்சியை ஏற்படுத்தினாலும், எடுத்தாளும் கரு கவிதையை தொடர்ந்து வாசிக்க தூண்டுகிறது. கவிதை முடிவில் ஏற்படுத்தும் தாக்கம் மீண்டும் ஒருமுறை கவிதையை வாசித்து விடத்தூண்டுகிறது. சொற்களின் எளிமை, மற்றும் நேரடியான பொருள் தரும் பிரயோகம் போன்றன கவிதையின் தன்மையினை எடுத்தியம்புகின்றன. எளிமையான சொற்களை கொண்டு கவிதைகள் எழுதிவிடுவது என்பது சாதாராண ஒரு செயற்திறன் அல்ல. சிறிது தவறினாலும் அந்த எளிமை கவிதைகளை அதன் விளைவுகளை தின்றுவிடும். வாசகனின் கவனத்தை சிதைத்துவிடாமல் கவிதைகளை நகர்த்திச்செல்லும் திறனை படைப்பாளி கொண்டிருப்பதனை குறிப்பிட முடியும்.

பிரெஞ்சு மொழியின் ஆளுமை, தர்க்கிக்கும் மொழியாடல், தத்துவார்ந்த தெளிவு பன்முக தேடல் போன்றவற்றினூடாக நகரும் கவிஞர், புலம்பெயர் ஈழத்தமிழ் கவிஞர்களில் தனி அடையாளமாகவும், கவிதை மொழியில் தனக்கென ஒரு பாணியினை கொண்டவராகவும் தன்னை நிலைநிறுத்தி உள்ளார்.

பிற்குறிப்பு ; 1984 இல் இருந்து பாரிஸில் வசித்துவரும் கவிஞர் வாசுதேவன் நீதித்துறையில் மொழி பெயர்ப்பாளராக கடமையாற்றுகிறார். "தொலைவில்", "அந்த இசையை மட்டும் நிறுத்தாதே" என்ற இரு கவிதைத் தொகுப்புக்களையும், "19 நூற்றாண்டின் பிரெஞ்சுக் கவிதைகள்" மற்றும் "பிரெஞ்சுப் புரட்சி" போன்ற மொழிபெயர்ப்பு நூல்களையும் வெளியிட்டிருக்கிறார்.

நன்றி.
http://www.pongutham...52-819ef8e5cf33

3 comments:

  1. சிறந்த திறனாய்வு

    ReplyDelete
  2. வணக்கம்

    விரிவான விளக்கம்... பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. அருமையான பகிர்வு!

    ReplyDelete