Tuesday 20 May 2014

என் தமிழாசான் திரு. ஆழ்வாப்பிள்ளை சுப்பிரமணியம்.

அகரம் உணரத்தியவர்.
அகவயம் இழந்து உறங்கிவிட்டார். 
காற்றுவழி தகவல் காதடைந்த கணத்தில்
உயிருடன் மெய்யும்  ஒருகணம் நடுங்க அமைதியாகினேன்.

என்றாவது ஒருநாள் ஊரடையும் போதில் அவர் முன்னால்,
கைகட்டி எழுந்து நிற்கவேண்டும் என்ற என் மனப்படிமம் குறுகிக் கிடக்கிறது.

அடங்காப்பிள்ளை
பாடசாலையில் மட்டுமா 
கோவிலில், மைதானத்தில் எங்குமே எப்போதுமே..


மெல்லிய புன்னகையோடு கடந்துபோன அந்த கணங்களில் எதுவுமே புரிந்துகொள்ள முடியவில்லை. புரிந்து கொண்டு அருகில் வர ஆசை கொள்கையில், 
காலம் எல்லாவற்றையும் தின்றுவிட்டது. 

காலம்... 
எவ்வளவு கனதிகளை சுமத்திவிடுகிறது.

கல்வியின் ஆரம்ப காலம். 
சிவகுரு வித்தியாசாலையில் அதிபர். என் தமிழாசிரியர். 
அப்பாவின் நெருங்கிய நண்பர்.

என் கரங்களிலும் கொஞ்சம் தமிழ் வர அன்று இவர் தந்த அரவணைப்பும் அன்பான ஆற்றுகையும் தான் முதற்காரனிகள்.
கட்டுரை கதை கவிதை பாடல் அரங்காடல்  என தமிழின் வனப்புகள் அனைத்தையும் அறிமுகப்படுத்தியவர். 

ஆனால்  
அன்றைய தினங்களில் கற்றுக் கொள்வதிலும் அக்கறை இருக்கவில்லை.
அவரிடமிருந்து மொழியறிவை பெற்றுக் கொள்வதிலும் அக்கறை இருக்கவில்லை. 
நண்பனின் மகன் நான். 
மிகுந்த அக்கறை கொண்டிருந்திருந்தார். 
ஆனால் அது அன்று எனக்கு சுமையாகவே தெரிந்தது. 
அப்போதும் ஒரு மெல்லிய புன்னகையுடன் தான் கடந்துபோவார். 

காலம் தன்னை உணரவைக்க எவ்வளவு சந்தர்ப்பங்களை தந்தது. 
அன்று மட்டும் உணர முடிந்திருந்தால்...

உண்மையில் அது ஒரு பொற்காலம்.
நெற்கொழு வைரவர் கோவில் தலைவராக இருந்தார்.
அப்பா உப தலைவர். 
நாங்களும் பேசவல்லவர்களாக மாறிவிட்டிருந்தோம்.
மட்டுமில்லாமல்
சொல் கேட்காப் பிள்ளைகளுமாக உருக்கொண்டிருந்தோம்.

சர்ச்சைகளை உருவாக்குவதன் மூலம் எங்களை அடையாளப்படுத்திக் கொண்டோம்.
அடையாளம் கிடைக்க கிடைக்க இன்னும் இன்னும் சர்ச்சைகளை உருவாக்கினோம். 
அந்த பொற்காலத்தை சிதைப்பதை உணராமல்..

அப்போதும் மென்மையான புன்னகையோடு தான் எங்களை கடந்து போயிருந்தார்.

அன்று ஒரு மாணவனாக அவரின் முன்னால் தோற்றுப் போயிருந்ததை உணர்ந்துகொண்ட நாளில் இருந்து  அவரிடம் ஒருமாணவனாக மீண்டும் பேசவேண்டும் என்ற பேராவல் கொண்டிருந்தேன்.

ஆசை நிறைவேறாமலேயே போய் விட்டது.

காலம்  காத்திருப்பதில்லை.
அறிந்தவர்கள் புன்னகையோடு கடந்துவிடுகிறார்கள்.
அறியமுடியாவர்கள் பின்னொரு நாளில் 
புன்னகைக்க முடியாமல் முடங்கிப் போகிறார்கள்.


வன்சொல் உரைத்ததில்லை 
என்றும் எதிலும் 
வல்லமை பேசியதுமில்லை
இதழோரப் புன்னகை மறைந்ததுமில்லை 
இயல்பிழந்து பார்த்ததுமில்லை.  

எளிமையாய் எடுத்துரைத்து 
வலிமையாய் நடந்து 
பொறுமையாய் நிகழ்த்தி முடித்து 
அமைதியாய் நின்று கொண்டவர்.

நட்சத்திரங்களை பிறப்பிக்கும் வானமாய் 
மனம் தெளிந்திருந்தவர்.

நட்சத்திரங்கள் அழிந்துவிடலாம் 
வானம் அழிவதில்லை.


1 comment:

  1. காலம்...
    எவ்வளவு கனதிகளை சுமத்திவிடுகிறது///////////

    unmai than sonthamae.

    ReplyDelete