Sunday 23 March 2014

ஒ கட்டியக்காரர்களே எங்கு போனீர்கள் ?.........

சாம்பல் பூக்களின் 
கண்ணீரை திருடும் தேசமிது ..
வெந்து வடியும் ஊழியின் 
பெருமூச்சுக்களை தின்று களிக்கும் கூட்டமுமிது
இயலாமையின் ஓலங்களின் மீது 
வக்கிரக்குறிகளால் புணரும் அரசுமிது..

ஒ கட்டியக்காரர்களே..
எங்கு போனீர்கள் ?

சாவுப் பட்டியலில் புள்ளடியிடுகிறீர்களா ஜெனிவாவில்?

கண்ணீரால்  நிரம்பிய எங்கள் 
வாசல்களில் கால் நனைத்தீர்களே.. 

நீரருந்தி நிமிர்ந்து 
நல்ல உணவருந்தி 
இன்னும் ஓராண்டு உள்ளக விசாரணைக்கு  
ஒப்புதல் அளியுங்கள்.. 

பிணங்களைப் புணர்ந்தவர்கள் காவலில் 
தேவதைகள் சிறகு விரிப்பதாக 
வரைவுகளை எழுதுங்கள்...

இருள் மூடிக்கிடக்கிறது எங்கள் வானம் 
நட்சத்திரங்களையும் சூரியனையும் தொலைத்துவிட்டு..
பேரமைதியோடு அடங்கிக் கிடக்கிறது காற்றும் கடலும்..
இரவுகளில் கூவைகளும் வல்லூறுகளும் காவலுக்கு வருகின்றன..
பகல்களில் குருதி தோய்ந்த பற்களுடன் திரும்புகின்றன 

ஒ கட்டியக்காரர்களே 
எங்கு போனீர்கள்..

விபூசிகாவும் நிருபனும் 
இன்னும் கேதீச்சர மனிதர்களும் 
ஆசீர்வதிக்கப்படவர்களா உங்களால் ????

குருதிகளும் நிணங்களும் 
எலும்புகளும் கிழிக்கப்பட்ட மனிதர்களும் 
ஓலங்களும் கண்ணீர்களும் 
வெற்றுப் பதிவுகளா உங்களுக்கு..

வாருங்கள் 
அடுத்த வருடமும்,
உங்களுக்கென்ன புள்ளிவிபரங்கள் தானே குறியீடு.. 
கண்ணீரால் நிரம்பிய வாசல்கள் 
சவக்குழிகளால் நிரம்பியிருக்கும் 
வந்து கால் பதித்து பதிந்து செல்லுங்கள்...











பொங்குதமிழ் இணையத்தில் வெளியான கவிதை.
http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=9&contentid=9f9da8b6-05e7-4c49-bb2f-b2446b757df4

3 comments:

  1. விபூசிகாவும் நிருபனும்
    இன்னும் கேதீச்சர மனிதர்களும்
    ஆசீர்வதிக்கப்படவர்களா உங்களால் ????
    ------------mm அப்படியே ஆயிற்று. இன்னும் இருப்போம் அவர்கள் வரவு பார்த்து.

    ReplyDelete
  2. வேதனை பொங்கும் வரிகள்...

    ReplyDelete
  3. ம்ம்ம் இப்படியேதான் நம் வாழ்க்கை.ம்ம்

    ReplyDelete