Wednesday 27 November 2013

கந்தகமேனியர் கலந்த காற்றை தடுக்கவா முடியும்..

தோரணங்கள் இல்லை
மஞ்சள் சிகப்பு நீலக்கொடிகள் இல்லை
எழுச்சி கீதங்களும் இல்லை
இது கார்த்திகைதனா
நாங்களும் தமிழர்கள் தானா..

ஒடுங்கிப்போகிறது சர்வமும்,
சவங்களா நாம்.
இத்தனை திங்களாய் என்ன செய்தோம்.

களையிழந்து கொண்ட நிலைதொலைத்து
வாடிக்கிடக்கிறாள் ஈழநங்கை.
மரகதமாமணிகள் உறங்குமிடமெங்கும்
பேரிருள் மேவி கிடக்கிறது.
காந்தள் சூடி ஒளிகொண்டு நிற்கும் காலமல்லவா இது.
நினைவேந்தலில் உருகியழும் நேரமல்லவா இது.

தீக்கடைக்கோல்களை மறந்துவிட்டு
எவரெவர் கால்களில் விழுந்தோம்.
ஒப்பாரி வைத்தோம்
எவராவது பார்த்தார்களா ?

வாருங்கள்
சாம்பல் அகற்றித் தீமூட்டுவோம்.
வேர்களில் இருந்து மீண்டும் தழைப்போம்.

விண்நிகர்த்த மேனியர் விதைத்த நிலத்தில்
புல் முளைத்தாலும் புலியாகுமென்று
நடுகல் உடைக்கிறான் .
கண்மணிகள் கண்திறந்திடுமோவென்று
கல்லறைகள் சிதைக்கிறான்.

கந்தகமேனியர் கலந்த காற்றை தடுக்கவா முடியும்?

வாருங்கள்
சுவாசித்து மீண்டும்
வேரிலிருந்து தழைப்போம்.
ஈழத்தேர் இழுக்கும் தினவு கொள்வோம்.

மணியொலித்து
மலர்முகம் பார்த்து
நெய்யூற்றி ஒளியேற்றாத
கார்த்திகை  இது கடைசியாகட்டும்.

2 comments:

  1. வணக்கம்
    ஐயா
    உணர்வு மிக்க கவிதை வரிகள் அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete