Tuesday 8 October 2013

மீட்பர்களின் வருகைக்காக.......

எஞ்சி இருக்கும் 
உடலங்களையும்  அரிக்கத்தொடங்கிவிட்டது  
வார்த்தைகளால் வளைத்த கூட்டம்,

புதிய ஏற்பாடு என்றும்,
மீள்ந்தெழல் என்றும்,
அறையப்பட்ட ஆணிகளை
அறைந்தவர்களை கொண்டே அகற்றுவோம் என்றும்
செவியை வழியாக்கி இதயத்துள் இறங்கினர்.

நச்சுக்காற்றும் பிணவாடைகளும் முகத்திலறைய,
மண்டையோடுகளையும் சிதைந்த கூடுகளையும்
தரவைகளிலும் உப்பங்களிகளிலும் எழும்
அவல ஓலங்களையும் கடந்து,

நம்பிக்கைகள் தொலைந்த நிலத்தில்
குருதியுண்டு செழித்த அடம்பன் கொடிகளையும்
இறந்தவர்களின் உறுதிகளால்
இறுகிப்போன விண்ணாங்கு மரங்களையும்
அலகுதுடைத்த ஊனுண்ணிகளின் ஏவறைகளையும் கடந்து,

எக்களிப்புடன் வனப்புடல் பார்த்து
குறிகசக்கி பல்லிழிப்பவனையும்,
சுடுகருவிகொண்டு படு என்றழைப்பவனையும் கடந்து,

தோற்றுப்போனாலும்,
நேற்றுப்போனவர்களின் நினைவுடன்
வாழ்தலின் விதிஎழுதவென்று தானே மைகொண்டோம்.

எம் வாசலில் எம் வயலில்
எம் கோவிலில் எம் ஊரில்
நாமேதான் இருக்கவேண்டும்
நாமாகத்தான் இருக்கவேண்டும்.

புதிய ஏற்பாடு செய்தவர்களே...
மீழுகை அறிவிப்பு செய்தவர்களே ...

எங்களின் முள்ளந்தண்டுகளை உருவி
தீ மூட்டி இருக்கிறீர்கள்
நீங்கள் குளிர்காய...
எங்களின் மூச்சுக் காற்றுக்களை விற்று
செங்கோல் ஏந்தியிருக்கிறீர்கள்
நீங்கள் கோலோச்ச...
எங்களின் ஏக்கங்களை கடன் வாங்கி
உங்களை நிரப்பிக்கொள்கிறீர்கள்
நீங்கள் உயிர்வாழ...

பெருவெடிப்பின் அவலம் சுமந்து
கொப்புளிக்கும் குருதியடக்கி
கொலையுண்டும் காணாமலும் போனவர்களின்
கடைசி மூச்சினை உள்வாங்கி
அமைதியாய் கிடக்கிறது தரவைகளில் ஆக்காட்டிகுருவிகள்

அவைகளுடன்
மக்களும் இந்த
தேசத்தின் தெருக்களில் இன்னும் 
காத்திருக்கிறார்கள்...

2 comments:

  1. // எங்களின் ஏக்கங்களை கடன் வாங்கி
    உங்களை நிரப்பிக்கொள்கிறீர்கள்.. //

    தவறான சிந்தனை...


    அன்புடன் அழைக்கிறேன் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Pleasure-Misery-Part-1.html

    ReplyDelete
  2. நிதர்சனம் சொல்லும்
    வீறுகொண்ட வரிகள் தம்பி...

    ReplyDelete