Sunday 1 September 2013

நாங்களும் துரோகிகளே..................

இத்தழிந்து போய்விடவில்லை
என் இனத்தின் நம்பிக்கை.

கொழுந்தெறித்து கிளைபரப்பிய
இனவிருட்சத்தின் வேர்களை கிளறியவனே
பார்......

செத்துவிடவில்லை எங்கள் வேர்களில்
இன்னும் நம்பிக்கை.

என்ன செய்யப்போகிறாய் இனி....

எங்களை
கொன்ற கதையை
யார்யாருக்கோவெல்லாம்
வென்ற கதையாக சொன்னாய்.....

எங்கள்
பிணங்களை புணர்ந்த பின்னான பொழுதை
மாலை புனைந்து கொண்டாடினாய்.....

எங்கள்
மகவுகளின் நெஞ்சுகளில்
நச்சுகுண்டுகளை விதைத்துவிட்டு
மண் வணங்கி மகிழ்ந்தாய்.....

உனக்கான காலமென்று ஒன்றிருந்தால்
எமக்கான காலமொன்றும் வரும் !
மீண்டும் வரும் !!

***********************
காலம் திரும்புகிறது.

நாச்சியார் விழிநீர் துடைக்கிறாள்
குருவிச்சியும் இனி வரக்கூடும்
வன்னியன் குதிரையின் காலடியும் கேட்கலாம்.

நாச்சியார் கோபம் இனி
நெடுங்காலம்  அடங்கிக்கிடக்காது.
எல்லாகேள்விகளையும் சுமந்திருக்கிறாள்.

வீரையும் பாலையும் நிலம் பிளந்து
வான்நோக்காது போனதுமில்லை,
வீரமும் வேகமும் கொண்டவன்
நேரமறிந்து எழுந்துகொள்ளாமல் போனதில்லை.

காலம் திரும்புகிறது.

வல்லையிலும் ஆனையிறவிலும்
கண்டல் காடுகளில் இருந்து எழுகிறது
பெயர் தெரியாப்பறவை.

தொண்டைமானாற்றிலும்
வளுக்கியாற்றிலும் மீண்டும் ஒலிக்கிறது
துடுப்புக்களின் ஓசை.

பூநகிரியிலும் கல்லுண்டாயிலும்
சன்னதம் கொள்கிறது காற்று
தேவன் குறுச்சியிலும் வீரமாகளியம்மன்  திடலிலும்
புறப்பாட்டின் குலவை எதிரொலிக்கிறது.

காலம் திரும்புகிறது.
*************
தாயின் கண்ணீரின் கனதியை
கரங்களில் ஏந்ததுணிந்தவள்
எப்படி சுமப்பாள்?
கண்ணீரின் காயாத பிசுபிசுப்பை
எங்கே துடைப்பாள் இவள்.?

என் குழந்தையே.....
துள்ளி விளையாடும் வயதினில்
உன்னையும் இங்கழைத்தது
எங்களின் விதியோ ?

எழுதுகோல் சுமந்து பள்ளிசெல்லும் நேரத்தில்
படம் தந்து ரோட்டில் நிறுத்தியது
எங்களின் இயலாமையோ ?

விரல் நீட்டும்  உன் உணர்வுகூட
எமக்கின்றிப்போனதே
மரணிதவர்களா நாம்?

மன்னித்துவிடு மகளே
உனக்கு முன்
நாங்களும் துரோகிகளே......





2 comments:

  1. ஆஹா இப்படி ஏன் கோபம் !கவிதை சிந்திக்க வைக்கின்றது பாஸ்§

    ReplyDelete
  2. கவிதை அருமை நண்பா! காலம் திரும்பட்டும்!!

    ReplyDelete