Monday 28 January 2013

விடுதலை தீ சுமந்தவனே ..........

வாசல்களில் 
மரணத்தின் வரவுகளை 
கணக்கு வைத்திருந்த கணப்பொழுதுகள் அவை .

முன்பெல்லாம் உறவுகள்கூடி
உடலம் சுமந்து 
மயானம் செல்வோம்,
ஊரே மயானமாகிப்போக
இறுதிக்கடன் மட்டுமல்ல 
இறுதியாய் கண்ணீர்கூட விடாமல் 
உடலங்களை  கடந்த தினங்கள் அவை.

எங்காவது எமக்காய் 
எம் குழந்தைகளுக்காய்
எம் உறவுகளுக்காய்
ஒரு குரலாவது ஒலிக்காதா என்று ஏங்கிக்கிடந்தோம். 
கரகரத்த குரலாவது ஒலிக்கும் என்று முனுங்கிக்கிடந்தோம்.

காற்றும் கடலும் வானும் 
எண்திசைகளும் எரிந்தன
எரிகுண்டுகளாலும் எறிகுண்டுகளாலும்,
உடலங்களை கண்ட 
நாய்களும் நரிகளும் இன்னபிற 
விலங்குகளும் அஞ்சியோடின,

அப்போதும் வலிகளோடு 
ஏங்கித்தான்கிடந்தோம்.
எதிலியாகி நடந்தோம்.

அறிந்தவன்  நீ எரிந்துபோனாய்.
தோழனே முத்துக்குமார் !!!!
நீ மூட்டியது தீயுமல்ல, 
உன்னையுமல்ல,
இனவிடுதலையின் பெருநெருப்பையும், 
துரோக அரசுகளின் கௌரவ முகத்தையும் தான்.

ஈரநெஞ்சத்தில் 
இணையற்றபெருவீரம் சுமந்த 
வீரத் தமிழ்மகனே_அன்று நீ 
மூட்டிய பெரும்தீயில் 
முகிழ்க்கின்றன ஆயிரம் ஆயிரம் சாதகப்பறவைகள்.
நாளையவை_ஈழ 
விடியலின் கீதம் இசைக்கும்.
அந்த பூபாள அதிர்வில் 
உன் பெயரே ஒலிக்கும்.

4 comments:

  1. அறிந்தவன் நீ எரிந்து போனாய்....வீர வணக்கங்கள்.

    ReplyDelete
  2. மறக்க முடியாத மறக்க கூடாத தமிழன் ... அவனுக்கு எங்களது வீர வணக்கம்

    ReplyDelete
  3. வாசல்களில்

    மரணத்தின் வரவுகளை
    கணக்கு வைத்திருந்த கணப்பொழுதுகள் அவை .


    முன்பெல்லாம் உறவுகள்கூடி
    உடலம் சுமந்து
    மயானம் செல்வோம்,
    ஊரே மயானமாகிப்போக
    இறுதிக்கடன் மட்டுமல்ல
    இறுதியாய் கண்ணீர்கூட விடாமல்
    உடலங்களை கடந்த தினங்கள் அவை.

    காற்றும் கடலும் வானும்
    எண்திசைகளும் எரிந்தன
    எரிகுண்டுகளாலும் எறிகுண்டுகளாலும்,
    உடலங்களை கண்ட
    நாய்களும் நரிகளும் இன்னபிற
    விலங்குகளும் அஞ்சியோடின,
    /////////////// கவிதையின் அமைப்பில் பிழையில்லை நேற்கொழுவா . ஆனால் தேரை நாங்கள் தான் வடம்பிடித்து இழுக்கவேண்டும் . அருமைக்கவிதைக்கு வாழ்த்துக்கள் .

    ReplyDelete