Tuesday 8 January 2013

வாருங்கள் பொங்கலிடுவோம்............



நீர் தேங்கி நீண்டு
கிடக்கிறது வயல்வெளி,
தீண்டுவாரில்லாத ஒற்றைப்பனையில்
தூக்கணாங்குருவிக்கூடுகள்
நிறைந்துபோய் கிடக்கின்றன,
சிதைந்த வயல்வரம்புகளில்
வெண்கொக்குகளும் காகங்களும் 
இறகுகோதி உலாத்துகின்றன,

கலப்பைகீறாத நிலமதில்
அல்லியும் நீர்முள்ளியும்
மண்டிக்கிடக்கிறது,
உடலங்களை உண்ட மதமதப்பில்.

நெல்லுத்தூத்தல்களும்
அறுவடைக்கால கூச்சல்களும் 
இல்லாத வெளிபார்த்து 
சலித்துக்கடக்கிறது  பருவக்காற்று.

நார்கடகங்களும் சாக்குகளும்
மக்கி மண்னேறிப்போகிறது 
வண்டில் சில்லுகளில் வலைபின்னி 
சிலந்தி கிடக்கிறது.

அசைமீட்கும் எருதுகளின் ஏரிகளில்
கரிக்குருவியின் எச்சங்கள் கோடுகளாய், 
விலைகென்று வளர்த்த கிடாயும் 
விழியுயர்த்தி மிரள்கிறது.  

காலநிலைப்படி
இது தைமாதம் தான்.
கதிர் அறுத்துப் புதுப்பொங்கலிடும்
புண்ணிய காலம் தான்.

முற்றம் முதல் 
உழுது விதைக்கும் நிலம்வரை 
சிலுவைகுறிகளாய் எச்சரிக்கை பலகைகள்.
எப்படி விதைப்பது?

உற்ற சொந்தங்களும்
பெற்ற மகன்களும் தடுப்புக்களில்,
யார் விதைப்பது?

விதைக்காத போது
எதைக்கொண்டு பொங்கலிடுவது ?

வாருங்கள்,
வித்துக்கள் சுமந்த மண்ணெடுத்து
தீ மூட்டுவோம்
பற்றியெழும் பெரும் தீயில்
இருப்பதைக்கொண்டு
படையல் செய்வோம் சூரிய தேவனுக்கு.

நாளைய விடியலில்,
சூரிய தேவனின் வருகையோடு
கருக்கொள்ளும்
வித்துக்கள் சுமந்த எங்கள் நிலம்.


4 comments:

  1. மனம் கனத்த கவிதை..!

    ReplyDelete
  2. ஒவ்வொரு வரியிலும் மண்மணக்கும் ஏக்கங்கள்

    ReplyDelete

  3. வணக்கம்

    காலத்தின் கோலத்தைக் காட்டும் கவிபடித்தேன்!
    ஞாலத்தை என்சொல்ல? என்நண்பா! - ஓலமேன்?
    ஆலத்தை ஒத்தவா்நாம்! ஆா்த்தெழுந்து செந்தமிழின்
    மூலத்தைக் காப்போம் முனைந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    பிரான்சு

    ReplyDelete
  4. காலமது விரைந்தோட பெருமூச்சு விட்டபடி
    நடந்து விட்ட சதி வலைகளை சாகும் வரை
    மறக்குமா நம் தமிழினம்?... நயவஞ்சகர்கள்
    சிதைத்தனர் நம் நிலத்தை இயற்கையும் தான்
    என்ன நம்மைத் தானே பழி தீர்க்கிறது....
    எத்தனை தை பிறந்தாலும் வழி(லி)தான் பிறக்குமா?????

    ReplyDelete