Tuesday 11 December 2012

இது மாரிகாலம் எந்தனூரில்..................


கரியமேகங்கள் திரண்டு கலையும்_அந்த
நிழல் படிந்து மறையும்,
வெயில் பட்டு தேகம் சிலிக்கும்,
மெல்லிய கூதல் காற்றில் பரவும்.
மாலை சரிகையில் _அந்தரத்தில்
மழைப்பூச்சிகள் உலாவும்
பின்னான இரவுகள் இருண்டு கிடக்கும்.
இது மாரிகாலம் எந்தனூரில்.

நீர் மோதும் வரப்புகளில்,
கொக்குகளும் நாரைகளும் நடைபோடும்
இரை தேடி,
சிலநேரம் இடம் மாறும்.
வத்தாக்கிணறு மேவிக்கிடக்கும் வெள்ளம்
மிதப்பவற்றில் எல்லாம்
எரியெறும்புகள் ஏறித்தவிக்கும்.

காற்றில் சலசலக்கும் நெற்கதிர்கள்
நெஞ்சம் தொடும், *நெற்கொழுவில்
விதைக்காத சில நிலத்தில்
அல்லியும் நீர்முள்ளியும் முளைதள்ளி கிடக்கும்.
இது மாரிகாலம் எந்தனூரில்.

பச்சைபிடித்து,
அடர்ந்து நிற்கும் ஆலமரம்_அருகில்
அடங்கி இருக்கும் வைரவருக்கு
திருவம்பா பூஜை நடக்கும்.
தலைமுறையாய் தொடரும்
சங்கூதலும் சில களவுகளும்.
நடக்கும் இம்முறையும்.

ஆறுமணிக்கே இருட்டும்
நேரம்கடந்தும்,
பசும்புல் படர்ந்திருக்கும் மைதானத்தில்,
வழக்காடிய கதைகளுடன்
எப்படியும் இருப்பர் ஒரு சிலராவது.
இது மாரிகாலம் எந்தனூரில்.

*மதவடியும் வேலகாடும்
தேவதை கடக்கும் சந்திகள்.
யாருக்காக யார் என்றே தெரியாது
ஆளை ஆள் சாட்ட அவளுக்கு ஒன்றும் புரியாது.
கண்டும் காணாமலும் கடந்து போன
அவளுக்குள்ளும் _அந்த
மாரிகாலம் இன்னும் இருக்கும்.

இங்கேயும்,
இது மாரிகாலம் தானாம்.
மரங்களிலும் வீதிகளிலும்
அடுக்கு மாடிகளிலும் பனி படர்ந்து குளிர்கிறது._பின்
மழை கழுவி போகிறது.
"இது மாரிகாலம் தான்".
எல்லோரும் சொல்கிறார்கள்.
என்னால் அப்படி சொல்லமுடியவில்லை.!!!!!!!!!

*நெற்கொழு :எனது கிராமம்(மருதநிலம் )
*மதவடியும் வேலகாடும் :எனது ஊரின் சந்திகள்.

10 comments:

  1. உண்மையான கிராமத்து தகவல்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா,உங்களின் மனதை எனது எழுத்துக்களும் தொட்டிருப்பதையிட்டு, மகிழ்வடைகிறேன்.நன்றி வரவுக்கு.

      Delete
  2. சொந்த மண்ணின் அழகியல் மனதில் படர்ந்துவிடும், அது முதல் காதல் போல, அழிந்துவிடாது. வேற்று மண்ணில் மாற்றுக் காலநிலையில் வசந்தங்களும், கூதல்களும் கசக்கவே செய்யும். ஒரு முறையேனும் சொந்த மண்ணைக் காண மனம் ஏங்கும்

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமான உண்மை. இக்பால்செல்வன் அண்ணா.எவ்வளவோ ஆசைகளை, ஏக்கங்களை விதைக்கும் இங்கே நிகழும் ஒவ்வொரு நிகழ்வுகளும். என்ன செய்வது நினைவுகளை தேற்றும் வழியாக எழுத்துக்களை பழகிக்கொண்டிருக்கிறோம்.நன்றி அண்ணா கருத்திடளுக்கு

      Delete
  3. //பச்சைபிடித்து,
    அடர்ந்து நிற்கும் ஆலமரம்_அருகில்
    அடங்கி இருக்கும் வைரவருக்கு
    திருவம்பா பூஜை நடக்கும்.
    தலைமுறையாய் தொடரும்
    சங்கூதலும் சில களவுகளும்.
    நடக்கும் இம்முறையும். //


    அழகாக கண்முன்னே கொண்டு வந்து காட்டி இருக்கின்றீர்கள் மண்ணின் அழகையும் ஒருமுறை இதமாக நுகர வைத்திருக்கின்றீர்கள் மண் வாசனையையும்...!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி அரசி,உங்களின் வரவுக்கும் கருத்திடளுக்கும்.கிராமத்து உணர்வுகள் பொதுவாக எல்லோருக்கும் இருக்கும், உங்களின் உணர்வுகளையும் பகிருங்கள் காத்திருக்கிறோம்.

      Delete
  4. கரியமேகங்கள் திரண்டு கலையும்_அந்த
    நிழல் படிந்து மறையும்,
    வெயில் பட்டு தேகம் சிலிக்கும்,
    மெல்லிய கூதல் காற்றில் பரவும்.

    மாலை சரிகையில் _அந்தரத்தில்
    மழைப்பூச்சிகள் உலாவும்
    பின்னான இரவுகள் இருண்டு கிடக்கும்.
    இது மாரிகாலம் எந்தனூரில்.

    ////நேராக என்மனதைக் கொழுவி , வந்த மாரியில் செம்பாட்டு புழுதி மண் வாசத்தை மணக்கச் செய்த உங்களுக்கு எனது இய்யங்கனிந்த வாழ்த்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. மிகவும் சந்தோசமாக இருக்கிறது கோமகன் ஐயா.இன்னும் அந்த நினைவுகள் தானே எங்களை இங்கே தாங்கிப்பிடிக்கிறது.
      உங்களின் கருத்திடலும் வருகையும் என் இருத்தலை இன்னும் இன்னும் மெருகேற்றுகிறது.நன்றி ஐயா.

      Delete
  5. நகரங்கள் கண்டு பழைமையாக்கியவைகள்....
    கிராமங்களில் இன்னும் தொடர்பவை
    அழகு

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா. அந்த கிராமத்தின் நினைவுகள் அழியாத ஓவியங்களாக படிந்திருக்கிறது எல்லோர் மனதிலும் ..............சந்தர்ப்பங்களும் சூழலும் கிளறி விடுகின்றன .........நன்றி நண்பா வரவுக்கும் கருத்திடளுக்கும்

      Delete