Friday 2 November 2012

மைகளாலும் புணரப்படுபவள்........... !!

விழியோரங்களில் மலரும் 
துளிப்பூக்களின் வாசங்களை 
நுகர்ந்துமகிழ்ந்த யந்தொன்றின்,

தேடிக்களைத்த கேவலச்சிறகுகளை,
மொய்த்துரீங்காரமிட்ட நோக்கல்களை,
கணநேர ஈனப்பிதற்றல்களை,
பொய்நாக்குகளின் வீணிகளை,
விலக்கி சீராக்கமுடிகிறது   
படுக்கையொன்றை இலகுவாக அவளால்.

இது 
திணிக்கப்பட்டதா என்றாலும் 
தவிர்க்கமுடியாதா என்றாலும்
தெரியாதென்பதே பதிலாகுகிறது.

வகையறியும் பார்வைகளை 
தகையுரியும் நாவுரைகளை  
முகைகருக்கும் வசவுகளை  
பகைபெருக்குமோர் பல்லவிகளை 
நகைத்தேவிலக்கி  யுள்யெரிதலவள் வழக்காயிற்று.

தினவெடுத்த மிருகங்களின்
நாவுகளில் படிந்திருக்கும் 
அழுக்குவேர்களின் அடிநுனியறிந்தவள்,
தினப்பொழுதுகளின் பின்னான ஒதுங்குதலில்
இழிந்த கௌரவவிம்பம் உடைத்தவள்

இவள் 
உதடுகளில் வலைபின்னிய சிலந்தியின் 
உயிரிருப்பினால் இன்னும் 
உயிரோடிருக்கிறது சில மனிதர்களின் சந்ததி.

நாளையிவளின்,
வரலாறொன்றின் கடைசி எழுத்துக்களின்
வடிவமும் சிதைக்கப்பட்டிருக்கலாம், 
எழுதுபவரின் ஆத்மதிருப்தியின் பொருட்டு.


2 comments:

  1. வருத்தப்பட வைக்கும் வரிகள்...

    இந்த நிலை என்று மாறுமோ...?
    tm2

    ReplyDelete
  2. வரிகள் தடுமாற வைக்கின்றன.....

    ReplyDelete