Thursday, 25 October 2012

உல(தி)ராத காயங்கள்

வெற்றிடமொன்றில் நிரம்பிக்கொண்டிருந்த 
 நினைவுகளின்  வெதும்பல்கள் 
விளிம்பு நிலையொன்றில் 
முனகிக்கிடக்கும்,


பகலின் நிர்வாணத்தின் முன் 
கூனிக்குறுகிக்கிடக்கும் அவை
இரவுப்போர்வைகளில் கூர்ப்படைந்து
அதீதமான பிரவாகத்துடன் 
ஓரங்களை தின்னத்தொடங்கும்.

இரைமுகரும் எலியொன்றின்
அச்சம் கலந்த கரியகண்களை,
இரையாகும் தவளையொன்றின்
ஈன அவல ஒலிகளை
உள்ளெழுப்பி உணர்வுகளை சிதைக்கும்.

தகனமொன்றின் நாற்றங்களை
பின்னான எச்சங்களை 
அருகிருக்கும் இலைகளில்
படிந்திருக்கும் புகைகுறியீடுகளை
விலகாதிருக்கும் மெல்லிய வெம்மையினை
பரப்பி சூனிய தனிமையினை பிறப்பிக்கும்.

கொஞ்சம் கொஞ்சமாக உருவேற்றும் அந்த
துர்தேவதைகளின் கொலுசொலிகள் 
நாளைமீதான வெறுப்பினை,

விதைகளை வெறுக்கும் விருட்சத்தின் 
வேர்களில் படிந்திருக்கும்  
ஒரு இலையுதிர்காலத்தின்  கண்ணீர்.Monday, 15 October 2012

வேர்கள் அ(ழு)லைகின்றன


மழைக்கூதல்
தேகம் தீண்டிப்பரவியவள் 
சோம்பல் கலைத்தது.

கிளைகளின்  ஆலாபனை
இடம்மாறும் புறாவின் குறுகுறுப்பு 
கடகத்துள் கிடந்த நாயின் முனகல் 
கட்டையை சுற்றும் ஆடுகளின் அரவமென,
அறிகுறிகளால் அவஸ்த்தைகளை 
உள்வாங்கி இயங்கத்தொடங்கினாள்.

அள்ளிவந்திருந்த 
கொக்காரை பன்னாடைகளை
தாவரத்து ஓரம்தள்ளி 
மழைநீரேந்த பானைகளை அடுக்கி,
தூவானம் தொடாதவிடத்தில் 
காயாத ஆடைகளை கட்டி,
உவனிக்காதவிடம்  பார்த்து 
அடைக்கோழியின் கூட்டையரக்கி, 
பெருமூச்சுடன் வான்பார்க்கையில் 
விழுந்தது துளிகள் முகத்தில்.

பாத்திரங்களில் ஒழுக்கு நீர் 
ஒசைலயத்துடன் விழ,
தெறித்ததுளிகளால் நனைந்தது நிலம் 
சாம்பலற்ற அடுப்போரம் 
வாயிலேதுவுமின்றி வரிசையிட்டன எறும்புகள்.
சன்னங்கள் துளையிட்ட சுவரில் 
ஈரத்தின் நரம்புகள் பரவத்தொடங்கின.
சட்டமிடப்பட்ட மகனின் படத்தை 
கழற்றியிருபுறம் துடைத்தாள். பார்த்தாள்.
கேணல் சுடரவன்.
தடவினாள் சுருக்கம் விழுந்த
விரல்களால் பெயரை.

செய்தி ......................................!!!!
மாவீரர் தினத்துக்கான ஏற்பாடுகள்
புலம்பெயர் தேசங்களில் வெகுவிமர்சையாக 
மேற்கொள்ளப்படுகின்றன.
Monday, 8 October 2012

நுகராத வாசனை

மலர் உதிரும்  ஓசையொன்றால்
குலைந்து போனவன் 
தனக்கான கல்லறையை செதுக்கத்தொடங்கினான்.

தேர்ந்த ஓரிடத்தில் 
நிறங்களை ஒதுக்கி
மௌனப்பாறைகளால் சுவர்களையும், 
நிர்வாணத்தை நிகழ்த்தி 
தனிமையால் புதர்களையும் 
உருவாக்கினான் முதலில். 

இருளடர்ந்த சுவருக்குள் 
வாசங்கள் நுழைந்துவிடாதிருக்க 
வேர்களையெல்லாம் களையத்தொடங்கியவன் 
கிளைகளின் ஈரலிப்பில் 
பூர்விகத்தை கழுவிக்கொண்ட கணத்தில் 
மொட்டொன்று அவிழ்ந்ததை உணர்ந்தான்.

கல்லறையின் வாசலில் 
இறகொன்று கிடந்தது 
பறத்தல் பற்றிய கனவோடு...................


Saturday, 6 October 2012

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நகர்வுகளில் மக்களின் பங்களிப்பு.......

           தமிழரின் பூர்விக தாயக நிலங்களில் முக்கியமானதும்,பல்லினப்பரம்பல்  கொண்டதுமான கிழக்கின் மாகாணசபை தேர்தல் முடிந்து பெருத்த ஏமாற்றங்களையும்,சலிப்புக்களையும்  உருவாக்கி, மீண்டும் மீண்டும் தமது பதவி மற்றும் அரசஅதிகார மையங்களுக்கான அடிபனிவினை மேற்கொள்ளும் அரசியல்வாதிகளின்  கேவல முகங்களை வெளிக்காட்டி இன்று கொஞ்சம் ஓய்ந்து போயுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளை  உருவாக்கி விட்டு தேர்தல் களமிறங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு, தேர்தல் முடிவுகளுக்கு பின்னான மேற்கொண்ட அரசியல்முதிச்சி அற்ற செயற்பாடுகள் பெருத்த விசனங்களையும், நம்பிக்கையீனங்களையும் புலத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் தமிழ் மக்கள் மத்தியில்  விதைத்து விட்டது என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இருக்க முடியாது. முஸ்லீம்காங்கிரசின்  கபட அரசியல் வியூகங்களை நாடிபிடித்தறிய முடியாத நிலையில் இன்னும் தமிழ்தலைமைகள் இருப்பதையிட்டு இவர்களால் தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரமானதும் அமைதியானதுமான ஒரு தீர்வினை நோக்கி நகரமுடியுமா என்ற ஐயங்களை உருவாக்குகிறது.இது இவ்வாறு இருக்க,
                                                                 சமகாலத்தில் மீளவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உள்முரண்பாடுகள் ஒலிக்கத்தொடங்கி விட்டது. இம்முறை கொஞ்சம் பலமாக.பொதுவாக தேர்தல்களுக்கு முன்பாகவும் பின்பாகவும் இவ்வாறான கோசங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தமிழரசுக்கட்சி தவிர்ந்த ஏனைய அங்கத்துவ கட்சிகளால் எழுப்பப்படுவது வழமையாகிவிட்டது  2009 களின் பின்பாக. கிழக்கின் வேட்பாளர் தெரிவுகளில் அங்கத்துவ கட்சிகளுக்கு வழங்கப்பட்ட  ஒதுக்கீடுகள் மிகுந்த சர்ச்சைகளை உள்ளரங்கில் உருவாக்கியிருந்தன. இந்தநிலை வடக்கு  மாகானசபை தேர்தலிலும் உருவாகிவிடக்கூடாது என்பதில்  தமிழ் தேசிய கூட்டமைப்பின்  தமிழரசுக்கட்சி தவிர்ந்த அங்கத்துவ கட்சிகள் மிகுந்த முனைப்புடன் செயற்படுவதையே உள்ளார்ந்து உணரமுடிகிறது. ஒரு இதயசுத்தியுடன் தமிழ் மக்களுக்கான தனித்துவ கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பை மாற்றியமைக்க முயல்வது போல காட்டிக்கொண்டு தங்களின் அரசியல் இருப்பினை தக்க வைக்கவே அதிகம் முனைகிறார்கள் எனலாம். தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் திரு .ஆனந்தசங்கரி அவர்களை முன்னிறுத்தி நகரும் இவர்களின் நகர்வானது தற்போதைய பாராளுமன்ற குழுத்தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தெரியப்படாத தலைவருமாக இயங்கிக்கொண்டிருக்கும் சம்மந்தன் அவர்களுக்கு  நெருக்கடிகளை கொடுத்து பணிய வைக்கும் ஒரு நகர்வாகவே இருக்கும்.
                                                                           
தமிழ் மக்களின் ஒரே தெரிவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இருந்ததற்காகன ஒரே  காரணம் தமிழ் மக்களின் அபிலாசைகளை, தமிழ் மக்களுக்கான  அரசியல் வெற்றிடம் உருவாகாமல்   புலத்திலும் வெளிநாடுகளிலும் அங்கீகாரத்துடன் செயல்படுவதற்கான ஒரு கட்டமைப்பாக விடுதலைப்புலிகளின் அனுசரணைகளுடன் உருவாக்கப்பட்டதே ஆகும் . இந்த இடத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புள் அங்கத்துவம் பெற்றிருந்த  தமிழர் விடுதலைக்கூட்டணியின் வாழ்நாள் பாரளுமன்ற உறுப்பினர் என்று அழைக்கப்படும், கூட்டணியின் தலைவராகவும் இருந்த மு.சிவசிதம்பரம் அவர்கள், தன்  இறுதிக்காலத்தில் தலைவருக்கு தான் தொண்டன் என்ற கருத்தியலை முன் வைத்து இருந்தார் என்பதும் நினைவில் கொள்ளவேண்டிய விடயமாகும். ஆயுத போராட்டமானது மௌனிக்கபட்ட பின்னான நிலையில் ஏற்பட வெற்றிடத்தினை,பேரம் பேசும் ஆற்றலினை  விடுதலைப்புலிகளின் அனுசரணையுடன் உருவாக்கப்பட தமிழ் தேசிய கூட்டமைப்பு நிரப்பி தொடர்ந்தும் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் என தமிழ் மக்கள் நம்பினார்கள்.ஆனால் இன்று  தலைமைத்துவ வெற்றிடத்தில் தங்கள் இருப்பினை தக்கவைக்கும் பொறிமுறையில் நம்பிக்கை வைத்து   தமிழ்தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகள் ஒரு தனி மனித எச்சாதிகாரங்களால் வழிநடத்தப்படுவதை  உணர முடிகிறது. இதனால் ஏற்படப்போகும் விளைவுகள் மீளவும் தமிழ் மக்களின் இருப்பினை ஆதால பாதளத்தில் தள்ளிவிடுவதாகவே அமையும். இந்த இக்கட்டான நிலையினை தவிர்த்து, தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பில் ஒருமித்த குரலாய் ஒலிக்கவும், உலகநாடுகளுக்கு எம் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எடுதியம்புவதற்காகவும் தமிழ் தேசிய கூட்டமைபின் அங்கத்துவ கட்சிகளிடம் ஒரு உள்ளார்ந்த அர்ப்பணிப்பு அவசியமாகும். அரசியல் இருப்பினை கடந்து தாம் சார்ந்து நிற்கும்  மக்களின் அபிலாசைகளை முன்னிறுத்தி செயற்படும் ஒரு கட்டமைப்பாக கூட்டமைப்பு மாற்றம் பெறவேண்டும்.அதற்கான உடனடித்தேவையாக கூட்டமைப்பின் மதிய குழு ஒன்று உருவாக்கப்பட்டு  கூட்டமைபினை ஒரு கட்சியாக பதிவு செய்யவேண்டும். அவ்வாறு உருவாக்கப்படும் மத்திய குழுவில் மூன்றாம் நிலைத்தலைவர்கள் அல்லது புத்திஜீவிகள் உள்வாங்கப்பட்டு அவர்களுடாகவே கூட்டமைபின் எந்தொரு நடவெடிக்கைகளும் முன்னெடுக்கப்படவேண்டும். இங்கே மூன்றாம் நிலைத்தலைவர்கள் அல்லது புத்திஜீவிகள் என்பது, முன்னாள் ஆயுதக்குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சாராத மக்களின் மீது, மக்களின் அபிலாசைகள் மீது கரிசனை கொண்ட வாக்கு அரசியலையோ,அதிகார மையங்களையோ நாடாத கல்வியாளர்களை,சமூக ஆர்வலர்களை குறிப்பதாகவே இருக்கிறது.
                                                                          கிழக்கின் மாகாண சபை தேர்தல்களுக்கு முன்பாக  தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் பேச்சு வார்த்தைகள் நடாத்திய சிவில் சமூகத்தினரால் எழுப்பட்ட கேள்விகளுக்கு தீர்க்கமான பதில் எதுவும் வழங்காத கூட்டமைப்பின் பேசவல்ல உறுப்பினர்கள், தேர்தல் முடிந்து கூட்டமைப்பினை பதிவு செய்தல் பற்றிய கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக அறிந்ததும் தமிழ் தேசிய கூட்டமைப்பை சிதைக்கும் ஆணையை யாருக்கும் மக்கள் வழங்கி இருக்கவில்லை என கூறி தங்களில் இருப்பினை தக்க வைத்துக்கொள்ள கேள்விகளை கேட்பவர்கள் மீது ஒரு வித துரோகிகள் பட்டத்தை கொடுக்க முன் வந்தனர்.மக்களின் ஆணையை என்றுமே கருத்தில் கொள்ளாது, மக்களின் கேள்விகளுக்கு பதில்  அளிக்காது, ஒரு பகிரங்க சந்திப்புக்களையோ,அல்லது கலந்துரையாடல்களையோ  நிகழ்த்த மறுக்கும் கூட்டமைப்பின் சில எச்சாதிகார உறுப்பினர்கள் இவ்வாறு அறிக்கைள் விடுவதன் மூலம் தங்களின் இருப்பின் தன்மையை உறுதி செய்யவே முயல்கிறார்கள் என்பது ஆணையை வழங்கிய மக்களுக்கு நன்றாகவே தெரியும். உண்மையில் கூட்டமைப்பினை மத்தியகுழு ஒன்றினை உருவாக்கி அதனூடாக  பதிவு செய்வதன் மூலம் தமிழரசுக்கட்சி தன் தகமைவாய்ந்த இருப்பினை இழந்துவிடும் என்ற அச்சமே காரணமாகும். இன்றைவரைக்கும் வீட்டு  சின்னத்தில் போட்டியிட்டு வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனைத்து செயற்பாடுகளுக்கும் உரிமைகோரக்கூடிய நிலையில் இருப்பது தமிழரசுக்கட்சி தான். ஒருவகையில் நோக்கினால் கூடமைப்பின் அங்கதுவக்கட்சிகளின் அச்சத்துக்கு காரணமாக இதுவே இருப்பதையும் உணரலாம். மக்கள்நலன் அக்கறை கொண்டதாக  காட்டிக்கொளும் இவர்களின் பயமும் தங்களின் இருப்புகள் மீதே இருப்பதை காணலாம்.உண்மையில் யாதார்த்த ரீதியாக நோக்கினால் இன்றைய அரசியல் தலைமைகள் தங்களின் நலன் மீது அக்கறை கொண்டு நகர்கின்றனவே தவிர மக்களின் நலன் மீது அல்ல என்பது தெளிவாகிறது.
                                                         இந்த நிலைகள் தொடரும் படசத்தில் தமிழர் அரசியல் அரங்கில் மீளவும் ஒரு பாரிய பெற்றிடம் ஒன்று  உருவாகி, தமிர்களின் இருப்பினை கேள்விக்குறியாக்கிவிடும் நிலை உருவாகும். சுமார் ஐம்பது வருடங்களுக்கு மேலான தமிழர் போராட்டங்கள், தியாகங்கள்  மறக்கடிக்கப்பட்டு, உயிர் சொத்து அழிவுகள் எல்லாம் பலனற்று போய்விடும்.  இந்த நிலை ஏற்படாதிருக்க வேண்டுமெனில், புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புக்களும், புலத்தில் தொடர்ந்தும் இயங்கு நிலையில் இருக்கும் சமூக அமைப்புகளும், புத்திஜீவிகளும் உடனடியான ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்து  தமிழ் தேசிய கூட்டமைப்பில் மத்திய குழு ஒன்றினை உருவாக்கி, அதனூடாக  கூட்டமைப்பினை  பதிவு செய்வதற்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும். இதற்கான அழுத்தங்களை கூட்டமைப்பின் இன்றைய தலைவர்களுக்கு உடனடியாக கொடுக்கவேண்டும். தவறும் பட்சத்தில் கூட்டமைப்பிணை  பாரிய பிளவொன்றினை நோக்கி நகர்த்தும் கூட்டமைப்பின் தலைவர்களின் செயற்பாடுகளுக்கு ஆதரவு கொடுத்த கேவலமான குற்றச்சாட்டை வரலாறு  புலம் பெயர் தமிழர்கள் மீதும்,புலத்திலிருக்கும் புத்திஜீவிகள் மீதும்  சுமத்திவிடும்.
                                                     
                                                                         

Thursday, 4 October 2012

ஹைக்கூ ............(முயற்சி இரண்டு)

சருகுகளை எரிக்காதீர்கள்
பாவம் நாளைய குழந்தைக்கான
மின்மினிப்பூச்சிகள்.
கலப்பை கீறிய நிலங்களில்
முளைக்கின்றன எலும்புக்கள்
ஈழதேசம்.

                                                                                                             
மாலை யாகியதால்
கசங்கியது மலர்
பிணத்தின் மேல்.
பசியாறும் பந்தியில்
பரபரத்தது மனது
வளையல் ஓசை


வேர்களும் இலைகளும்
தலையாட்டின மகிழ்ச்சியில்
ஏணைக்குள் குழந்தை 


                                பருவத்துக்கு வரும்
பறவைகள் பறப்பதில்லை
மனதை விட்டு.

                                                       
வேம்போ நுணாவோ
குரலில் பிசிறில்லை குயில்.
நான்.


இறந்த நண்பர்களுக்கு அஞ்சலி 
உதிர்த்தியது காற்று.
பூக்களை