Sunday 15 July 2012

உள்ளிருந்தொரு குரல்


 சிரித்தபடியெனை உற்றுப்பார்த்தான்
எனை தாண்டிஎனக்குள் நின்றவன்.
தலைகுனிந்து முனுமுனுக்க தொடங்கினேன்,

நிறுத்து உன் புலம்பல்களை 
நிறையறிந்தவன்
நிகழ்த்தியவுன்
தரமறிந்தவன் நான் என்றான்.

மௌனமாக்கிக்கொண்டேன் எனை!

கழற்றிஏறி
மௌனசட்டை உனை
குற்றவாளியாக்குகிறது என்றான்.

விழிகளால் கேள்வி தொடுத்தேன்.

கேள்வி கேட்காதே,
உனக்கான கேள்வியை தேடு_நீ
விடையாய் மாறாதே
மற்றவர்களுக்கு என்றான்.

தப்பிக்க திரும்பிப்பார்த்தேன்

தப்பு செய்கிறாய் நீ
உனக்காக இல்லாமல்
எதுக்காக இருக்கிறாய்
உன்னில் இருந்து ஆரம்பி என்றான்

பதிலுரைக்க வாயெடுத்தேன்

காதுகளை போத்திக்கொண்டவன்
கற்றுக்கொள் தன்னிடம்,
எதையும் பெற்றுக்கொள்ளாதே என்றான்

நடுங்கிய கால்களை
அனுதாபத்துடன் பார்த்தவன்
இறந்தகால ஈரமின்னும் இருக்கிறதே
துடைக்கும் காலத்துணி எங்கே என்றவன்,
அவனே தொடர்ந்தான் ........

எரிவதென்றால்
சாம்பலாகி காற்றில் அலையவும்,
நிறைந்திருப்பதென்றால்
தேநீர்பதத்தைப்போல் பாரந்திருக்கவும்,
கற்றுக்கொள் !!

ஒரு காகிதமாக,
ஒரு எழுத்தாக ,
ஒரு அர்த்தமாக இருப்பதைவிட
ஒரு எழுத்தாணியாக இருந்துவிடு !
வாழ்க்கையை அர்த்தமாக எழுதிவிடும் அது !!

No comments:

Post a Comment