Monday 23 July 2012

வேலிகள் இழந்தபின் ............!!!


நீலம் பாரித்து கிடக்கிறது
நெடுவானம் அமைதியாக,
மிதக்கும் சிலபருந்துகளும்
தாழபறக்கும் காகங்களும்
தம்பண்பிலிருந்து விலகாது செவ்வனவே .............

முற்றிய நுணாகுலை,
கட்டாத கயிறென கறுப்பியாடும்,
கட்டையில் நின்ற கன்றுக்கு
கறக்காது பால்கொடுத்த சிவலையும்,
சந்தோசமாக வழமையை விட
சந்தோசமாக,

யாழோசையில் பக்கத்துவீட்டார்
பெயர் ஒலிக்கிறது பாடலுக்காக,
கேட்டு மகிழ இயலவில்லை

கோயில்பூட்டி போகும் ஐயரின்
சைக்கிள் செயின் சத்தம்
நேரத்தை நினைவூட்டியது

வரும் நேரங்கடந்ததால்
ஆற்றியபால் ஆறி ஆடை படிந்து,
சுற்றிலும் சிலஎறும்புகள் திரிய கிடக்கிறது .

நெற்றியில் அச்ச வியர்வை துளிர்க்க
கைபிசைந்து வரவுக்காக
வாசலை நோக்கியிருக்கிறாள்,
நேற்றுமவர்களின் நடமாட்டம் பார்த்ததாக
காற்றுவழி வந்த கதை
அந்தரத்தில் நின்றது அவளுக்குள்,

காத்திருந்து சலித்துபோய்
முற்றத்தில் அங்குமிங்கும் நடந்தவள்
அண்ணாந்து பார்த்தாள்

ஆந்தையொன்றின் அலறலை தவிர
எந்த அசுமாத்தமும் இல்லாமல்
முழுநிலவில் வானம்
நீலம் பாரித்து கிடந்தது.

சிலநேரம்
அடுத்த கணத்தில்
தெரியவும் வரலாம் அவளுக்கு
மகள் சிதைக்கப்பட்ட கொடுரம் !!!


No comments:

Post a Comment