Monday, 30 July 2012

காலங்கள் மீது பயணிக்கும் காதல் ..


அதிஉச்ச காத்திருப்பொன்றை
வழங்கிவிட்டிருந்தது 
காலம்,இந்த காதலின் மீது !

எத்தனை மழைப்பொழுதுகள்
கடந்தனவென்று நினைவிலில்லை!

பார்வைகளாலும் சிரிப்புக்களாலும் 
சின்னதலையசைப்புக்களாலும்
பகல்கள் கடந்தன ................
அவற்றின் மீதான நினைவுகளால் 
இரவுகள் இறந்தன ............

நிழல்தந்த ஆலமரம் 
நிறையதடவை இலையுருத்தி 
துளிர்த்து நின்றது !!

பகிர்தலுக்கான காத்திருப்பின் 
கணங்களில் நிகழும் 
பதற்றத்தை,தயக்கத்தை
தளம்பல்களை,புலம்பல்களை 
புரிந்துகொள்ளாமல் 
யாராவது வந்துவிடுவார்கள் அல்லது 
மிக மிக தாமதமாய் நீ வருவாய்  ............

ஊரடங்கு குண்டுவெடிப்பு 
சுற்றிவளைப்பு தலையாட்டல் 
என்றெல்லாம் அந்தரித்த காலத்திலும் 
பின்னான பேச்சுகாலங்களிலும் 
பேசுதல் என்பதுதாண்டி சஞ்சரித்திருந்தது நேசிப்பு.

உலவியொன்றின் மையப்புள்ளியை 
சுற்றிவந்தோம்  விலகாமலும் நெருங்காமலும்
என்மீதான உனது கரிசனைகள்
மிக மிக அதிகரித்திருந்தன 
கனிந்த பழமொன்று காம்பினை இழக்கப்போகும் 
கணங்களை ஒத்திருந்தன .......... 

காலநீட்சியின் வியூகங்கள் வியாபிக்க......
உடைப்பதற்கான சாத்தியங்கள் இருந்தும்,
சாத்தியங்கள் பற்றி யோசிக்கதொடங்கிய 
கணமொன்றில் தற்கொலை செய்துகொண்டது 
பகிர்தல், இருவருக்குமிடையில் ...........................

அதிஉச்ச காத்திருப்பொன்றை
வழங்கிவிட்டமைக்காக 
நிராதரவான காலமும் அன்பும் 
பயணிக்கதொடங்கின 
இணைந்து  .................................!!Tuesday, 24 July 2012

இயங்குதலே இயக்கமாக .............

ஆதாளபாதளமொன்றின் இருளுக்குள் 
ஊசலாடிக்கொண்டிருக்கிறது 
வாழ்வியலின் தொன்மம் 
சுவாசக்காற்று தேடி..... 


மௌனத்தின் அலறல்கள் 
ஊழிக்கால ஒத்திகையாய் 
மெல்லமேலெல_அது 
யாருக்கும் தென்படாத
ஆழிக்கண்ணியின் வர்ணனைகளாய்
பேசுபொருளாகிறது !!


சாத்தியமில்லாத கற்பித்தலால் 
வாழ்வியல் இரகசியத்தை 
ஒப்புவிக்கிறார்கள் திகம்பரதேச சம்சாரிகள்.

நிசப்தமிழந்த மனவெளியில் 
காலப்புரவி கடந்த காலடிகளும் 
கிளறிச்சென்ற புழுதிகளும் 
ஒப்புவிப்புக்களையெல்லாம்
ஓரங்கட்டி நிலைத்திருக்கின்றன வடுக்களாக,

நாளைதாண்டிய நாளையொன்றில் 
தொன்மத்தின் அர்த்தரேகைகள்  
புரிபடக்கூடும்_இருந்தாலும்,
இன்றையை தோல்வியாகிக்கொள்வதில்  
அமைதியாகி விடப்போவதில்லை!!!!!

ஆதலால் கண்ணே.............

இடைவெளிகள் நிரப்ப 
படையலாகின்ற வரிகள் இவை !
நடை பயிலும் பொன்மயிலே _இந்த 
கடைவிரிப்புக்கொரு பதில் கொடு !!

கலைகின்ற போதில் 
உதிர்கின்ற பாக்கள் இவை 
கலைமானே -இங்கு 
கொஞ்சம் கவனி 

தூண்டியதுன் விழிகள் தான் _எனை 
வாட்டியதும் உன்விழிகள் தான் 
காட்டியதுன் மொழிகள் தான் _ஆசை 
ஊட்டியதும் உன் மொழிகள்தான் 
அலைவித்ததுன் அசைவுகள்தான் _உயிர் 
கலைவித்ததுமுன் அசைவுகள்தான்

சித்தத்துள் நிதம் 
சித்துக்கள் செய்யும் 
சித்திரப்பாவையே_இந்த 
கத்திப்பார்வை நிறுத்து. 
கருத்துள் காதல் 
குருத்துக்களை  உ(க)ருவாக்கிய, 
திருமகளே _இங்கு 
கொஞ்சம் திரும்பு.

வேண்டலில்லையாதலால்_எதுவும் 
கிடைத்தலில்லை,
தயக்கம் கொள்வதால் _என்றும் 
வெற்றி கொள்வதுமில்லை,
இதுவொன்றும் ஒருவழிப்பாதையில்லை. 
ஆதலால் கண்ணே,
விலங்குடைத்து 
திருவாய் மொழிகள் பகர் .


நன்றி 
தினக்குரல் 2007மார்கழி 09    

Monday, 23 July 2012

வேலிகள் இழந்தபின் ............!!!


நீலம் பாரித்து கிடக்கிறது
நெடுவானம் அமைதியாக,
மிதக்கும் சிலபருந்துகளும்
தாழபறக்கும் காகங்களும்
தம்பண்பிலிருந்து விலகாது செவ்வனவே .............

முற்றிய நுணாகுலை,
கட்டாத கயிறென கறுப்பியாடும்,
கட்டையில் நின்ற கன்றுக்கு
கறக்காது பால்கொடுத்த சிவலையும்,
சந்தோசமாக வழமையை விட
சந்தோசமாக,

யாழோசையில் பக்கத்துவீட்டார்
பெயர் ஒலிக்கிறது பாடலுக்காக,
கேட்டு மகிழ இயலவில்லை

கோயில்பூட்டி போகும் ஐயரின்
சைக்கிள் செயின் சத்தம்
நேரத்தை நினைவூட்டியது

வரும் நேரங்கடந்ததால்
ஆற்றியபால் ஆறி ஆடை படிந்து,
சுற்றிலும் சிலஎறும்புகள் திரிய கிடக்கிறது .

நெற்றியில் அச்ச வியர்வை துளிர்க்க
கைபிசைந்து வரவுக்காக
வாசலை நோக்கியிருக்கிறாள்,
நேற்றுமவர்களின் நடமாட்டம் பார்த்ததாக
காற்றுவழி வந்த கதை
அந்தரத்தில் நின்றது அவளுக்குள்,

காத்திருந்து சலித்துபோய்
முற்றத்தில் அங்குமிங்கும் நடந்தவள்
அண்ணாந்து பார்த்தாள்

ஆந்தையொன்றின் அலறலை தவிர
எந்த அசுமாத்தமும் இல்லாமல்
முழுநிலவில் வானம்
நீலம் பாரித்து கிடந்தது.

சிலநேரம்
அடுத்த கணத்தில்
தெரியவும் வரலாம் அவளுக்கு
மகள் சிதைக்கப்பட்ட கொடுரம் !!!


Thursday, 19 July 2012

தள்ளாடும் கொடிமரங்கள் !!!!

                                                           வன்னிச்சி அம்மன் கோவிலடியில் பஸ்சுக்காக காத்திருந்த குமார்,நேரத்தை பார்க்க முழுக்கை சேட்டின் முன்பக்கத்தை இழுத்த போது கையில்கட்டியிருந்த கறுத்த மணிக்கூட்டை பார்த்தான். மிகவும் பழுதாகி விட்டாலும் எதோ ஒரு ஈர்ப்பின் காரணத்தால் இன்னும் எறியாமல் வைத்திருப்பதை எண்ணி தனக்குள் மலர்ந்து உற்சாகமானவன், எப்படியும் இன்னும் ஒருபத்து நிமிடமாவது செல்லும் பஸ் வர, என முனுமுனுத்த படி சேட் பொக்கற்றை தட்டிப் பார்த்து ஒரு சீக்கரட்டை எடுத்து வாயில் வைத்தவன், திருப்ப எடுத்து பார்த்தான். இதையெலாம் பத்தி பழகவேண்டி வந்ததே என சலித்துக்கொண்டவன், கசக்கிபோடவும் முடியாமல் திருப்ப வாயில் வைத்து பத்தவும் முடியாமல் தடுமாறிய கணத்தில் இரைச்சல் சத்தம் கேட்டு திரும்பி பார்க்க முடக்கில் பஸ் வருவதைக்கண்டான்.சிவப்பு நிறத்தில் பெரிய மிருகமொன்று கத்திக்கொண்டுவருவதைபோல இருந்தது ஓடிய வேகத்தைவிட அது ஆடியவேகம் தான் அதிகமாக தெரிந்தது.அருகில் வர கையைகாட்டிவிட்டு சுற்றி அடித்த புழுதிக்குசற்றே ஒதுங்கிக்கொண்டவன்

Sunday, 15 July 2012

உள்ளிருந்தொரு குரல்


 சிரித்தபடியெனை உற்றுப்பார்த்தான்
எனை தாண்டிஎனக்குள் நின்றவன்.
தலைகுனிந்து முனுமுனுக்க தொடங்கினேன்,

நிறுத்து உன் புலம்பல்களை 
நிறையறிந்தவன்
நிகழ்த்தியவுன்
தரமறிந்தவன் நான் என்றான்.

மௌனமாக்கிக்கொண்டேன் எனை!

கழற்றிஏறி
மௌனசட்டை உனை
குற்றவாளியாக்குகிறது என்றான்.

விழிகளால் கேள்வி தொடுத்தேன்.

கேள்வி கேட்காதே,
உனக்கான கேள்வியை தேடு_நீ
விடையாய் மாறாதே
மற்றவர்களுக்கு என்றான்.

தப்பிக்க திரும்பிப்பார்த்தேன்

தப்பு செய்கிறாய் நீ
உனக்காக இல்லாமல்
எதுக்காக இருக்கிறாய்
உன்னில் இருந்து ஆரம்பி என்றான்

பதிலுரைக்க வாயெடுத்தேன்

காதுகளை போத்திக்கொண்டவன்
கற்றுக்கொள் தன்னிடம்,
எதையும் பெற்றுக்கொள்ளாதே என்றான்

நடுங்கிய கால்களை
அனுதாபத்துடன் பார்த்தவன்
இறந்தகால ஈரமின்னும் இருக்கிறதே
துடைக்கும் காலத்துணி எங்கே என்றவன்,
அவனே தொடர்ந்தான் ........

எரிவதென்றால்
சாம்பலாகி காற்றில் அலையவும்,
நிறைந்திருப்பதென்றால்
தேநீர்பதத்தைப்போல் பாரந்திருக்கவும்,
கற்றுக்கொள் !!

ஒரு காகிதமாக,
ஒரு எழுத்தாக ,
ஒரு அர்த்தமாக இருப்பதைவிட
ஒரு எழுத்தாணியாக இருந்துவிடு !
வாழ்க்கையை அர்த்தமாக எழுதிவிடும் அது !!

இருப்பை இழத்தல்


எரிதலுக்கும் அனைதலுக்கும்
இடைப்பட்டதொரு அரியகணத்தை
இரசிக்க முயல்கையில்,
காலங்கள்மீதான என்னிருப்பு
கேள்விக்குறியானது.
அக்கணத்தில்,

பிரபஞ்ச ரகசியமொன்றை
உச்சரித்தபடி வந்த
யுகாந்திரங்களை கடந்த தென்றலின்
தடவுதலில் கேட்கத்தொடங்கியது
முன்னோர்களின் ஒப்பாரி!!

ஆதியொருவனின் ஆசைகளின்
குறியீடுகள் பற்றியும்,
முரண் பெருமூச்சுக்களின்
வெப்பவிளைவுகளையும்,
நாளைகாய் இன்றையை
இழந்தவனின் காயாத கண் ஈரத்தையும்,
முகத்திலறைந்து போனது அது !

காலக்கயிற்றின்
மலர்க்கட்டுக்கள்
வலிக்கத்தொடங்கின


காலத்தின் மீதான காத்திருப்பு


சூனியபரப்பில் சிறகுவிரித்து 
இரைதேடிக்கொண்டிருக்கிறது 
மனப்பறவை !!

இளைப்பாறலுக்கான மரத்தில் 
இலைகளில்லாமல்,
கூடுகளில் சிதைந்துபோன 
குஞ்சுகளின் எச்சங்களும்
என்றோ கட்டப்பட்ட இளங்கொடி பொதிகளும்,

அனாமதேய குரல்களின்
ஒலிப்புகள் எரிச்சலூட்டினாலும்,
துனையிருப்பின் ஆறுதலை
தூண்டுகிறது உள்ளுக்குள்.

அமைதிப்பிரவாகத்துள் மூச்சுக்கான
சப்தம் மட்டும் மெல்லிதாக ............
அச்சத்துடன் அலைகிறது
இருதயத்துடிப்பொலி காற்றில் ..........

உண(ர்)வுக்கான
தனக்கான உண(ர்)வுக்கான 
பறத்தலை  நியதியாக்கி,
இருப்புக்காக
தனக்கான இருப்புக்காக
போராட்டத்தை  வழமையாக்கி
காத்திருக்கிறது இளைப்பாற்றலிலும்.

தூரத்தில் மிகதூரத்தில்
பிரசவ வேதனையோடு
ஒரு கரியமேகம்...........


செத்துக்கொண்டிருக்கும் 
செஞ்சூரியன் கடைசி கதிர்களால் 
தடவிச்செல்கிறது தினமும் ...........!!!

Sunday, 1 July 2012

அசாதாரணம் சாதரணமாக...............

அழைக்காதவொரு விருந்தாளியாய் 
அடிக்கடி வந்துவிடுகிறது 
இப்போதெல்லாம் .............

ஒரு பெருமழைநேரத்தில் 
தகரகொட்டில் வாசியாக ..........

கொடும்பசியுடன்  ஒரு 
சமையலுக்கான தனியனாக ...........

ஒரே நேரத்தில் 
பூக்குவியலின் வாசத்தில் 
குழைந்துவரும் கெட்டவாசம் உணர்பவனாக ............

எரிச்சல் இயலாமை 
பொறுமையிழந்தொருகோபம் 
நிகழ்த்திப்போகிறது.

நீர்கோர்த்து விழிகள் 
நிறம்மாற  இமைகள்  குத்தும்,
வேர்த்து வியர்வை 
மென்சூடாய் நெற்றியோரம் வழிய 
சரக்கென்று வலிக்கும்.
சிலகணம் சிறுகாற்றுப்பட சில்லிடும். 

காரணங்கள் அறியப்படாமல் 
காரணங்கள் அறிவிக்கப்படாமல் 
எங்கோ நிகழும் ஒரு 
உறுப்பின் மறுப்பே 
அழைக்கப்படாத இந்த விருந்தாளியின் வருகை !!

என்ன செய்வது 
இயலாமைஎன்றாலும் 
இயங்குதலின்றிப்போனால்
வாங்குதல் வழங்குதல்  வற்றிப்போகும்.

இப்போதெல்லாம் பழகிவிட்டது 
வந்த விருந்தினரை வீட்டில்இருத்திவிட்டு 
வேலைக்கு செல்லும் இந்த வாழ்க்கையும் 
அடிக்கடி வரும் தலையிடியும் .............!!!