Tuesday 5 June 2012

முகமின்னும் மீதமிருக்கிறது!!!


நினைவு வலிகளை நீக்குமொரு
நிகழ்வுப்பயணத்தை
நினைவுகளூடே நீட்டிக்கொள்கிறது மனது.
நீழ்கின்ற இரவினில்,
உள்ளச்சுவரில் நினைவுகளின்
வர்ணங்கள் பூசப்பட பூரித்துப்போகிறது
நிகழ்கணங்களில் முகம்.
வல்வைக்கடலுவர்க்காற்று
வந்துமோதி முற்றத்து
முல்லை பூவுருத்திப்போகும்
எல்லையிலுயர்ந்த ஒற்றைபனையில்
இணைதேடும் அணிலோன்றின்
அவதிக்குரல் கடந்து போகும் .......

தெருக்கரைஎருக்கலையும் நாயுருவியும்
மறுக்காதனுப்பிய தூதுகள்,
முறுக்கெழுந்த கறுவல்காளை
செருக்குடன் நிமிர்ந்து பார்த்தபார்வைகள் _ஊர்
உருக்குலைதிருந்தாலும் வைரவரின்
திருக்கலையாதிருந்த கோலங்கள் ...............



பிணிஎதுமில்லாமல் போய்வர_வல்லை
முனியப்பரை துணை கேட்டு
எல்லைத்தாண்டிய பயணங்கள்
உடுவை சந்தியில்
உணர்வறியா உவர்ப்புடன் தேடல்
பாடுபொருளாய் பலகாலங்கள்
அவள்மீதிருந்தகாதல்..........
என்நிதி கேட்டும் அவன்
சந்நிதி போனதில்லை _என்
சங்கதி அங்கிருந்தால் வேறு
வேலையிருந்ததில்லை.

ஊரணி ஊற்றுக்கும்
தொண்டைமான் ஆற்றுக்கும்_எம்
பேரணி செல்லும் நீந்திவர,
ஊர்புரணி பாடும் .........
பிறந்தாலும் மலர்ந்தாலும்
இறந்தாலும் _காதலில்
விழுந்தாலும் வென்றாலும் _நண்பர்களின்
விருந்து வரும்_ மறுநாள்
நாயள் பெற்றவர்களின் என்று பேச்சும்வரும்.....

விழிகளில் நீர் வர
நினைவுகள் கரைந்தழிகிறது
மொழிகள் போய்மறைகிறது
போகாதிருக்கும் நினைவுகளால்
முகமின்னும் மீதமிருக்கிறது
இந்த அகதி வாழ்க்கையில்





2 comments:

  1. விழிகளில் நீர் வர
    நினைவுகள் கரைந்தழிகிறது
    மொழிகள் போய்மறைகிறது
    போகாதிருக்கும் நினைவுகளால்
    முகமின்னும் மீதமிருக்கிறது
    இந்த அகதி வாழ்க்கையில்.///அற்புதமான வரிகள் ரசித்துப் படித்தேன் .

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் உறவே,உங்களின் வருகையும்,கருத்தும் என்னை இன்னும் இருக்க செய்கிறது

      Delete