Sunday 20 May 2012

இப்படித்தானோ .........!


நெஞ்சிலடித்து _ஓடி
வந்தணைத்து ஒப்பாரிவைப்பர்
அப்புறமென்ன _கொஞ்சம்
தள்ளியிருந்து
எப்படியாம் ..............!
செத்தவன் மீண்டும் செத்துப்போகும்படி
பித்துப்பிடித்த கதைகளை
வாய்கள் மெல்லும்
வெற்றிலை வரும்வரை .


பாடையிலிருந்து _ஐயர்
பந்தல் வரை பார்த்து .....பார்த்து
செய்தவர்கள்
அக்கம் பக்கம் பார்த்து
வேலியோடு ஒதுங்குவார்கள் _வரும்போது
இருமிக்கொண்டு வந்து
உறுமிக்கொண்டு நிற்பார்கள் .
செத்தவனை நினைப்பார்களா ?

கட்டாடயும் மேளமும்
நிலத்திலிருக்க ஐயர் மட்டும்
கதிரையிலிருந்து காலாட்டியபடி
மூவரின் எண்ணவோட்டமும்
ஒரு முவாயிரம் தாண்டுமா
என்று தானிருக்கும் .

இடையிடையே _ஓரிரு
குரல் ஓங்கியொலிக்கும்
எட்டிப்பார்த்தால்
கிட்டடிச்சொந்தமாயிருக்கும் .

அடிமனதில் ஆசையை
புதைத்தவள் மட்டும் _எதோ
பிரமை பிடித்தவளாய்
அழவும் முடியாமல் .........
ஆற்றுப்படுத்தவும் முடியாமல் ...........

அடித்தகண்ணீர் கவிதையை _அவள்
வீட்டுசுவரில் ஒட்டி
இனியவன் ஆத்மா சாந்தியடையும் _என்று
கதைத்துக்கொண்டு
கூடித்திரிந்தவர்கள் வரவும்
பாடையில்வைத்து தூக்கவும்
சரியாய் இருக்கும்,
ஊரிக்காடு மட்டும்
ஊர்வலம் நீளும்.

முடிவில்
கை கால் கழுத்தில் போட்டதை
கவனமாக வேண்டிமடியில்
கட்டுவான் கொள்ளிவைத்தவன் .
பெரும் சுமை முடிந்ததாய்
பெருமுச்சுவிட்டபடி விலத்துவார்கள்
ஒவ்வொருவரையும் ஒவ்வொருவர் .
அப்புறம்
கொஞ்சநாள் மட்டும்
வீட்டில் அழுகையொலி கேட்கும்
அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக
சுருதி குறைந்துகொண்டு வரும் .

இப்படித்தானோ .........!
என் சாவுவீடும் நிகழும் .

(இது யாழில்இருந்தபோது எழுதி பிரசுரிக்கப்பட கவிதை  2002இல்),

2 comments:

  1. ம்ம் சாவைக்கூட சிந்திக்கும் வண்ணம் சிந்திய கண்ணீர் கவிதை!

    ReplyDelete
  2. நண்பனே இது யாழில் இருந்த காலத்தில் எழுதியது
    வாழ்வே அதுவாகத்தானே இருத்தது ..............

    ReplyDelete