Sunday, 13 November 2016

இறுதித் தரிப்பிடம் - வழி தவறாத பயணிப்பு


நீண்ட நாட்களின் பின் ஒரு ஈழத்தவர் சினிமா. 
முதலில் வாழ்த்துகள் சுஜித் ஜீ. 
கதை ஒன்றுமேயில்லை. ஒவ்வொருவருக்கும் தெரிந்த, ஒவ்வொருவரும் ஏதாவது ஒருநாளில் அறிந்த, அல்லது பார்த்த சம்பவங்களின் நுண்மையான, நேர்த்தியான  ஒரு புள்ளியும் அதன் நீட்சியும் தான். 

அந்த புள்ளியின் நீட்சி எவ்வாறு திரைமொழியாகிவிடுகிறது என்பதில் தான் இறுதித் தரிப்பிடம் நிலைத்து நிற்கிறது. வெற்றி பெறுகிறது. அலைவுகளையும், அழுத்தங்களையும். சமூக அவலங்களையும்  ஒவ்வொரு கட்டத்திலும்  அழுத்தமாகவும், திருத்தமாகவும் பதிவு செய்துவிடுகிறது காட்சியமைப்பு.  கதைக்கும் காட்சி அமைப்புக்கும் ஏற்ப, அந்தக் காட்சி அமைப்பின் தன்மையையும் அது வெளிப்படுத்துகின்ற உணர்ச்சியையும் உணர்ந்து நடித்திருக்கிறார்கள் ஒவ்வொருவரும். மிக சிறப்பான வெளிப்படுத்தல்கள் பஸ்கியினுடையது. பேசுகின்ற மொழியாகட்டும், மௌனமான அசைவுகளாகட்டும் இன்னொரு பரிமாணமாகவே இருக்கிறது.

"பெண்"  எங்கள் சமூகத்தில் என்னவாக இருக்கிறாள். என்னவாக இருக்க, மாற  நிர்ப்பந்திக்கப்படுகிறாள், அவளுடைய குரல் எதை கேட்கிறது. எதைப் பதிலாகப் பெறுகிறது என்பதனை போட்டு உடைத்திருக்கிறார் இயக்குனர். இல்லத்தலைவியாக இருக்கும் பெண் கூட எவ்வாறானதொரு அடக்குமுறை உள்ளாக்கப்பட்டிருக்கிறாள் என்பதனையும் அழகாக எடுத்துக்காட்டி  இருக்கிறார். கையறு நிலையில் இருக்கும் உறவுப் பெண்ணுக்கே உதவமுடியாத ஒரு சூழ்நிலைக்கு இல்லத் தலைவியை உள்ளாகுவது போன்ற காட்சிகளூடாக மிக நுட்பமாக கொண்டுவந்திருக்கிறார். பிரதான பாத்திரமான புலம்பெயர்ந்துவரும் பெண்  எவ்வாறானதொரு அடக்குமுறைக்கும் துஸ்பிரயோகத்திற்கும் ஆண் மைய சிந்தனையால் உள்ளாக்கப்படுகிறாளோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் இலத்தலைவியும் உள்ளாக்கப்படுவதை நுட்பமாக காட்சிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக நடித்திருப்பவர், நடிக்கவில்லை. வாழ்ந்திருக்கிறார். 

திரைமொழி, காட்சி அமைப்புக்கள், இசை போன்றவற்றில் கொடுத்த உழைப்பையும் அக்கறையையும் கதையிலும், கதை உரையாடல்களிலும், சில காட்சித்தொகுப்பிலும் இன்னும் கொஞ்சம் அதிகமாக கவனமெடுத்திருக்கலாம். காட்சிகளால் உணர்த்தும் சில இடங்களில் வசனங்கள் கவனத்தை சிதைக்கின்றன. புலம்பெயர்ந்து வந்தவராக காட்டப்படும் கதைநாயகி பேசுகின்ற "எங்கட தமிழ் இன்னும் கொஞ்சம் எங்களுந்த தமிழாக" வந்திருக்கலாம். தந்தையின் மரண செய்தியை  கடத்துமிடத்தில் பாஸ்கி இன்னும் கவனமெடுத்திருக்கலாம். இதுபோன்ற சிறிய குறைகளை தவிர்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. இருந்தாலும், பாடல்களாலும் மாசிலன் குறும்படத்தின் மூலமும்  மட்டுமே அறிமுகமாகி இருந்த "சுஜீத்ஜீ"யை  நம்பி வந்த எங்களை அவர்  நிச்சயமாக ஏமாற்றவில்லை. 

Thursday, 19 May 2016

குருதியில் தோய்ந்த சூரியன்

கிளைகள் பிளந்த நெடுமரங்களில்
வீழ்ந்துபடுகின்றான்
எழாண்டுகள் முன் குருதியில்
தோய்ந்த சூரியன்

நிலம்
துயரை சுமந்திருக்கிறது.

காலம்
உதிர்தல் குறித்த அச்சத்துடன்
அவசரமாகக்  கடக்கிறது.

Thursday, 28 April 2016

பலி கேட்கும் சாமிக்கு என்ன தண்டனை வழங்கப்போகிறோம் ?

  
 "உலகிலுள்ள மற்ற சமுதாயங்கள் போல தமிழ்ச் சமுதாயமும் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக  மாறவேண்டும் "--பெரியார் 

      தனித்தனிக் குழுமங்களாக அலைந்து திரிந்த ஆதிமனிதன்  ஒருநிலைப்பட்டு, கற்காலம், இரும்புக்காலம், செம்புக் காலம்,  நவீனம்  என வளர்ச்சியடைந்தபோது அவனுக்கு இயற்கையின் சக்தி  சூட்சுமங்கள் புரியத்தொடங்கின. இதன் அடிப்படையிலேயே தெய்வ வழிபாடுகளையும் அதன் வளர்ச்சியையும் புரிந்துகொள்ள வேண்டும். வெறுமனே சிறுதெய்வ வழிபாடு அல்லது பெருந்தெய்வ வழிபாடு என்று உதிரிகளாகப் பிரித்துவிட முடியாது. சிவனும் பிள்ளையாரும் முருகனும் பெருந்தெய்வங்கள் அல்ல. அதேபோல 'இன்று" கருப்பனும் மாடனும் காமாட்சியும் சிறுதெய்வங்களாகவும் இல்லை. அவற்றின் பேரில் கண் முன்னே நிகழும் ஒரு உயிர்க்கொலையை மௌனமாக ஏற்றுக்கொண்டு, அது சாமி சடங்கு என்று அங்கீகாரம் வழங்கிவிடமுடியாது, எனவே நாங்கள் எந்தச் சாமியின் பக்கமும் நிற்கமுடியாது.

Sunday, 17 April 2016

இறந்தவன் எனக்கொள்க

காலச்சிதைவின் துர்க்கனவிலிருந்து
உயிர் பெற்றெழுமெனை மறுப்பின்றி
இறந்தவன் எனக்கொள்க.

ஒளிப்பொட்டில் கரைந்தழியும் இருளின்
மறைப்பில் நீளுமெனது  நிவாணம்
காலத்தால் வாழ்ந்தவன்
எனக்கொள்க,

சாத்தியமேயில்லாத
இரண்டாம் உயிர்த்தெழுகை நடுங்குமிந்த
இரவுகளில் நிகழ்ந்துவிடக் கூடுமென்ற அச்சத்தில்
விழிகளை  திறந்து போட்டிருக்கிறேன்.
கபாலத்தைப் பிளப்பது போலொன்றும்
இலகுவாயில்லை
காலத்தைப் பிளப்பது.
பெயரை அழித்துவிடுதலும்
எனைக் கொன்றுவிடுதலும் வேறுவேறாயினும்
ஒன்றென்பதுபோல எதுவுமே இலகுவாயில்லை.

நேற்று நேற்றாயிருந்தது
இன்று நேற்றாயிருந்தது
நாளையும்  நேற்றாய்த்தானிருக்கும்.
மறுநாளும் அதன் மறுநாளும் நேற்றாய்த்தானிருக்கப்போகிறது.
ஆணிகளைத் தூர வீசுங்கள்
உயிரற்றவனை அறைவதற்கொன்றும் சிலுவை தேவையில்லை.


Sunday, 21 February 2016

பனித்திடலில் கரையும் கால நினைதோடியின் பாதுகைக் குறிப்புகள்

தண்டவாளத்தின் ஓரமாக கவிழ்ந்து கிடந்த ஒற்றைச்செருப்பை மீண்டும் திரும்பிப் பார்க்கிறேன்.  என்னையறியாமல் கண்களை அதன் மற்றைய செருப்பை தேடுகின்றன. அருகில் எங்கேயும் காணவில்லை. ஏமாற்றத்துடன் தொடருந்து வருகிறதா என்று பார்க்கிறேன் அல்லது பார்ப்பது போல நடித்து என்னை ஏமாற்றிக்கொள்ள முயல்கிறேன்.  

இதோ இந்த தண்டவாளத்தில் எத்தனையோ பொருட்கள் சிதறியும் சிதைந்தும் கிடக்கின்றன. குழந்தைகளின் பொருட்கள் கிடக்கின்றன. உடைந்து போன குடை கிடக்கிறது. கையுறைகள் கிடக்கின்றன. யாரோ ஒரு பெண் அணிந்த அலங்கார தலைமுடி கூட கிடக்கிறது.  ஆனால் இந்த செருப்பை மட்டும் மனது ஏன் காவிக்கொண்டு வருகிறது. மீண்டும் அந்த செருப்பு கிடந்த இடத்தை பார்க்கிறேன்.  முழுமையாக பார்ப்பதற்காக கொஞ்சம் நெருக்கமாக சென்றுவிட்டு ஒரு வித இயலாமையுடன் பின்வாங்கி தொடருந்து நிலைய இருக்கை ஒன்றில் அமர்ந்து கொள்கிறேன். மனதில் ஏதேதோ கேள்விகள் குடைய ஆரம்பித்தன.