Tuesday 20 January 2015

அலவாங்கு

   என்ன நினைத்தானோ தெரியவில்லை கையில் எடுத்த பிரஸ்சை திரும்பவும் எடுத்த இடத்தில் வைத்துவிட்டு  சரத்தை தூக்கிச்  சண்டிக்கட்டு கட்டினான் சுரேந்தர். சுவரில் பொருத்தப்பட்ட கண்ணாடியை நிமிர்ந்து  பார்த்தவன், கம்பியில் கொழுவி இருந்த துவாயை எடுத்து  கழுத்தால் சுற்றி முதுகை மறைத்துப் போட்டுக் கொண்டு வீட்டுக்கு முன்புறம் வந்து  வேப்பம் மரத்தில் சாய்த்துக் கிடந்த கொக்கத் தடியை எடுத்து ஒரு வேப்பம் கோப்பை வெட்டி விழுத்தினான். மொக்கு நீக்கு இல்லாத நேரான குச்சியை முறித்து இலைகளைப் பிடுங்கி எறிந்துவிட்டு  நுனியை வாயில் வைத்து சப்பித் தும்பாக்கிகொண்டு வீட்டின் முகப்பு கேற்றை  நோக்கி நடந்தான்.

Friday 2 January 2015

உயிர் சுமக்கும் வேர்கள்..

குளிர்காலத்தின் துயர் சுமந்த கிளைகளில்
கனவுகளை எழுதுகிறது 
சாம்பல் பறவையொன்று,

இனிவரும்,
வசந்தகாலத்தின் இலைகள்
பறவையின் கனவுகளை 
மொழிபெயர்க்கவும்,
இன்னொரு பறவை சுமந்து செல்லவும் கூடும்,

அந்தக் கணங்களில்,
அந்தப் பறவையும்
மரமும்
என்ன பேசிக்கொள்ளும்......

கனவுகளை வைத்திருந்து
கையளித்ததிற்கு நன்றி கூறிப் பிரிந்து செல்லுமோ..
கிளையின் துயர் மீது
கண்ணீர் சிந்திக் கழுவிப்  போகுமோ..
கூடுமுடைந்து
அங்கேயே தங்கிவிட துணியுமோ..

சாம்பல் பறவையின் கண்களில் இருந்து
பெருவெளியில் கலந்தது
அரூபமொன்று,

கிளைகளில் இருந்து
வழியத்தொடங்கிய காலத்தின் துயர்
பறவையின் கனவுகளை மூடிப் பெருகத்தொடங்கியது.

யாருக்குத் தெரியும்
இனிவரும் வசந்தகாலத்தில் 
இந்தப் பறவையும் எப்படி இருக்குமென்று?

திணை மாறி அலையும்
கனவுகள்  மௌனமாகச் சுழிகொண்டு எழ,
பகலுக்குள் இறங்கும் இருளைமீறி
தேடத்தொடங்குகிறேன்.

யாராவது இருக்கிறீர்களா ?

இந்த
அகதியின் கனவுகளையும் 
என்ன செய்வதென்று சொல்லுங்கள்.